2007 Awards |
கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். இவர் மௌனி, புதுமைப்பித்தன், ந.முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புகளை மொழிபெயர்த்து உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தைஅறியச் செய்தவர். இவர் மொழிபெயர்த்த தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில தொகுப்பொன்றும் பெங்குவின் மூலம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இவர் இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்பு பட்டறைகள் நடாத்தி தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் வெற்றி பெற்று வருகிறார். கனடாவில் வெளியான ஈழத்து தமிழ்க் கவிதைகள், புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தொகுதியான Lutesong and Lament ல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவருடைய மொழிபெயர்ப்பு பணியின் மற்றொரு பரிமாணமாகும்.
நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் அவர் தொடர்ந்து பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதி வருகிறார். எழுத்தாளர் பாமாவின் "கருக்கு", அம்பையின் "காட்டில் ஒரு மான்" ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Award இவருக்கு முறையே 2000, 2006ம் ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது. இவர் இன்னும் தொடர்ந்து பல நவீன புனைவுகளையும். கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்.
தமிழ் மொழியின் தொன்மையையும்,அதன் வளத்தையும், விரிவையும் சிறப்பையும் உலகளாவிய ரீதியில் அறியச் செய்தவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் தொடர்ந்த சேவைக்காக திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2007ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
Sponsored by Vaithehi Balamurugan
Sponsored by Dr Oppilamani Pillai
Sponsored jointly by Jay & Lalitha Jayaraman and R.Rabendravarman
Sponsored by Nandakumar Mailvaganam
Sponsored by SuRa Memorial Fund Kalachuvadu Trust