2002 Iyal Award |
மணிக்கொடி பரம்பரையில் வந்த மூத்த எழுத்தாளரான திரு கே.கணேஷ் அவர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி, மௌனி போன்ற தலைசிறந்த படைப்பாளிகளின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தவர். இடதுசாரிக் கொள்கையாளரான திரு கே.கணேஷ், தமது பன்னிரண்டாவது வயதில், சென்னையில் வெளியான லோகசக்தி இதழில் எழுதிய முதல் கவிதையுடன் எழுத்துலகில் பிரவேசித்தார்.
தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிப்பதில் உறுதுணையாக இருந்த இவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்காக நடத்தப்பட்ட அகில உலக கவிதைப் போட்டியில் பரிசு பெற்று ஜப்பான் நாட்டுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது இணை செயலராகப் பணி புரிந்தவர்."பாரதி" என்ற சஞ்சிகையையும் வெளியிட்டார். நவசக்தி, தேசாபிமானி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் இவர் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. உலக மொழிகளில் வெளியான பல அருமையான படைப்புகளை தமிழிலே தந்த பெருமை இவருக்குண்டு.
இவர் முயற்சியில் வெளிவந்த இருபதுக்கும் மேலான மொழிபெயர்ப்புகளில் முக்கியமானவை முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டத் தகாதவர்களும், சீனாவின் சிறுகதைச் சிற்பி லூசினின்சிறுகதைத் தொகுதிகளும் என்று சொல்லலாம். வியட்நாம்,பல்கேரியா, ஹங்கேரி, உக்ரேய்ன், சோவியத் நாட்டு படைப்புகளும் இவர் மொழிபெயர்ப்பில் அடங்கும். இவருடைய வியட்நாமிய சிறுகதை நூலுக்கும், உக்ரேனிய கவிதை மொழிபெயர்ப்புக்கும் விருதுகள் கிடைத்தன. இலக்கியச் செம்மல் (1991) கலாபூஷணம் (1995) ஆகிய இலங்கை அரசின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கியத்துக்கு கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தொடர்ந்த சேவைக்காக திரு கே.கணேஷ் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2002ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.