2005 Awards |
முனைவர் ஜோர்ஜ் எல். ஹார்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ் துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக கடமையாற்றியவர். இவருக்கு லத்தீன், கிரேக்கம், ரஸ்யன், ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு.
பல இந்திய மொழி இலக்கியங்களிலும் பரிச்சயம் பெற்றிருக்கிறார். இவர் மொழிபெயர்த்த The Poems of the Tamil Anthologies (1979) நூல்The American Book Award க்கு பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. இது தவிர The Forest Book of Ramayana of Kampan (1988) ஆரண்ய காண்டம் மொழிபெயர்ப்பு, The Poems of Ancient Tamil (1975) என்று இன்னும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்பொழுது பத்திற்றுப் பத்துவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்.
ஜோர்ஜ் ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. தமிழை செம்மொழியாக்கவேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 ல் தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கு இவரே மூல காரணம். இன்று நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் அங்கே உயர் தமிழ் கல்வி பெறுவதுடன் தீவிரமான தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்திய பெரியார் என்ற முறையில் அவர் ஆற்றிவரும் தொடர்ந்த சேவைக்காக முனைவர் ஜோர்ஜ் எல். ஹார்ட் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2005ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.