2013 Awards |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது. 'ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.
டொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.
பல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் இவரது கல்வி ஐந்தாம் வகுப்புடன் முற்றுப் பெற்றது. இலங்கையில் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டிருந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களை 1948ஆம் ஆண்டு ஜீவா சந்தித்தார். அவரது பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அது அவரது சமூக, அரசியல், இலக்கிய செல்நெறியைத் தீர்மானித்த ஒரு மகத்தான சந்திப்பானது. ஜீவானந்தம் மீதான அபிமானம் காரணமாக டொமினிக் என்ற தமது பெயரை 'டொமினிக் ஜீவா' என மாற்றிக் கொண்டார்.
டொமினிக் ஜீவா இன்றி ஈழத்தமிழ் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லலாம். கருத்து முரண்பாடுகளைப் புறந்தள்ளி, அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை உற்று நோக்கும் எவரும், இந்த உண்மையை ஒப்புக்கொள்வர். இவர் தமது அயராத உழைப்பின் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஒரு முழுநேர இலக்கியக்காரனாகத் தமது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தார். ஈழத் தமிழருக்கென்றேயான நவீன இலக்கிய மரபு ஒன்று தோன்றிய காலத்திலிருந்து அதன் பிரதம பேச்சாளராகச் செயற்பட்டார். ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான ஆரம்பகால இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். தமது இலக்கியப் பணிகளூடாக, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய, சகஜ நிலைமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.
திரு டொமினிக் ஜீவா இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் ’தண்ணீரும் கண்ணீரும்’ தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசை வென்றது. 5 கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘மல்லிகை’ எனும் இலக்கியச் சிற்றிதழும், ‘மல்லிகைப் பந்தல்’ எனும் பதிப்பகமும், இளவயது முதல் அதீத நம்பிக்கையுடன் அவர் பின்பற்றிய அரசியல் மார்க்கமும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது பணிகளுக்கான விதைநிலங்களாக இருந்து வந்துள்ளன. இன்று தனித்துவமான சிந்தனையும், செயல் வலுவும் மிக்க ஒரு புதிய இலக்கியத் தலைமுறை அவற்றின் விளைச்சலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
பல்வேறு நிலைப்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், புலமையாளர்கள், படைப்பாளிகள் பலரது பங்களிப்புகளுடன் வெளிவந்த ‘மல்லிகை’ இதழ்களும், ‘மல்லிகைப் பந்தல்’ வெளியீடுகளும் இன்று பல்கலைக் கழகப் பட்டமேற் படிப்புக்களுக்கான ஆய்வுக் களங்களாகப் பயன்படுகின்றன; அறிஞர்களதும் ஆய்வாளர்களதும் தேடுதளமாக விளங்குகின்றன. சிறந்த எழுத்தாளராகவும், சிற்றிதழ் வரலாற்றின் முன்னோடிச் சாதனையாளராகவும் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைக்காக திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2013) கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் 17 ஜூலை 2014 அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்பட்டது.