2006 Awards |
இலங்கையில் தாழையடி என்னும் கிராமத்தில் பிறந்த திரு ஏ.சீ. தாசீசியஸ் சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். பேராதனை பல்கலைக் கழகத்திலும், அக்குவினாஸ் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் பின்னர் லயனல் வென்ற் நாடக அரங்கிலும் இவர் உயர் கல்வியும் நாடகத்துறையில் பயிற்சியும் பெற்றார்.
இவர் மேடையேற்றிய கோடை, புதியதோர் வீடு, பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், எந்தையும் தாயும் போன்ற நாடகங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற இவர் சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும், சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருதையும் இலங்கையில் பெற்றவர்.
லண்டனில் பிபிசிக்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சமயத்தில் ஐந்து மாதப் பயணத் திட்டத்தில் சென்னைக்கு சென்று அங்கு பயிற்சிப் பட்டறைகள் நடாத்தி நாடக உலகில் விழிப்புணர்வையும், புதிய பாதைகளையும் ஏற்படுத்தியவர். சுவிற்சலாந்தில் சலாமி என்ற நாடகத்தை தமிழ், ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கி முதன்முறையாக மேடை ஏற்றி சரித்திரம் படைத்தவர். இதைத்தொடர்ந்து சுவிற்சலாந்து அரசு அதனது 700ம் ஆண்டு நிறைவை கொண்டாடியபோது ஏ.சீ.தாசீசியஸ் என்னும் ஈழத் தமிழரை கலைத் துறை ஆலோசகராக நியமித்து கௌரவம் செய்தது.
ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா என்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சகல நாடுகளுக்கும் பொதுவானதாக தமிழ் பள்ளிகளில் பணிபுரியும் ஆசான்களுடன் உசாவி கருவளக் குழுவில் ஒருவராக பாடங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நீதியான சமாதானத்துக்காகவும், மக்களாட்சிக்காகவும் குரல் கொடுக்கும் திட்டமிடல் குழுவில் பணியாற்றிக்கொண்டு இன்று கலைத்துறையில் தொடர்ந்து சேவை செய்கிறார். தமிழ் நாடகக் கலையை உலகத் தரத்துக்கு உயர்த்தி நாடகத்துக்கும் தமிழுக்கும் ஈழத்துக்கும் புகழ் சேர்க்கும் திரு ஏ.சீ. தாசீசியஸ் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக 2006ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.