2008 Awards |
பதினாறு வயதில் ஆரம்பித்து கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் அம்பை. அவருடைய இயற்பெயர் C.S. லக்ஷ்மி. இளங்கலை, முதுகலை பட்டங்களை முடித்தபிறகு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய முனவர் பட்டப்படிப்பை முழுமைசெய்தார். இவருடைய முதல் நாவலான அந்திமாலை இளம் வயதிலேயே வெளிவந்து கலைமகள் பரிசை பெற்றுத் தந்ததோடு இவருக்கு பெரும் புகழையும் கொடுத்தது. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று இவர் அறியப்படுகிறார்.
மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அம்பை மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.
அம்பையின் நூல்கள்: அந்தி மாலை , சிறகுகள் முறியும் , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை , காட்டில் ஒரு மான் , வற்றும் ஏரியின் மீன்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea , In a Forest, a Deer ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். "பயணப்படாத பாதைகள்" என்ற ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு "சொல்லாத கதைகள்" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.
கடந்த நாற்பதாண்டு காலமாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயல்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விரித்து தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் கடத்தியவர் என்ற வகையில் அம்பை அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2008ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
Sponsored by Vaithehi Balamurugan
Sponsored by Dr Oppilamani Pillai
Sponsored jointly by Jay & Lalitha Jayaraman and R.Rabendravarman
Sponsored by Nandakumar Mailvaganam
Sponsored by SuRa Memorial Fund Kalachuvadu Trust
Recipient Angela Britto