2004 Iyal Award |
இலங்கையிலும் தமிழகத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் கலைப்படைப்புகளிலும் ஆழ்ந்த அக்கறையும் ரசனையும் கொண்டுள்ளோரிடையே இன்று "ஐயர்" என்று சொன்னால் இலக்கியத் தொண்டர் என்கிற சொற்றொடொருக்கு உரிய இ. பத்மநாப ஐயரை மட்டுமே அது குறிக்கும்.
திரு பத்மநாப ஐயர் ஓர் இலக்கியப்படைப்பாளி அல்லர். ஆனால் ஒரு படைப்பாளியின் முக்கிய கடமை என்று கருதப்படும் பண்பாட்டுக்கு செழுமை சேர்க்கும் செயல்பாடுகளை உணர்ந்தவர். அந்த வகையில் ஒரு படைப்பாளியின் அதே தீவிரத்துடன் தமிழுக்கு செழுமை சேர்ப்பதிலும் உயிர்ப்பு மிகுந்த உணர்வை பேணுவதிலும் ஐயர் இடைவிடாது உழைத்திருக்கிறார். ஈழத்து நூற்பதிப்பு துறையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்மநாப ஐயர் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறார்.
ஈழத்து படைப்புகளை தமிழகத்திலும் சர்வதேச அளவிலும் எடுத்துச் சென்றதில் பத்மநாப ஐயரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அயலிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் அவர் மிகப்பெரிய இணைப்பாலமாக விளங்கினார். தமிழகத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அக்கரை இலக்கியம்( 1968) என்ற ஈழ மலேசிய படைப்புகளின் தொகுப்பு முதல் கனடாவில் ஆங்கிலத்தில் வெளியான ஈழத்து இலக்கியத் தொகுப்பு ( Lutesong and Lament - 2001) வரை இலக்கிய முயற்சிகளில் பத்மநாப ஐயர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் பாராட்டுக்குரியது.
தமிழில் வெளியீட்டகத்தின் மூலமாக கவிதை சிறுகதை, ஓவியம், மொழிவரலாறு ஆகிய பல்வேறு துறை சார்ந்த நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு தனி மனிதராக அனைத்துலக தமிழ் எழுத்தாளர்களிடையே ஒரு தொடர்பு மையமாக அவர் ஆற்றிய பணி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமானதாகும். நவீன தமிழ் இலக்கியத்தை பதிப்புத் துறைமூலமும், மொழிபெயர்ப்பு தொகுப்பு மூலமும் வளர்த்தெடுத்தவர் என்ற முறையில் அவர் ஆற்றிவரும் தொடர்ந்த சேவைக்காக பத்மநாப ஐயர் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2004ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.