2003 Iyal Award |
திரு வெங்கட் சாமிநாதன் 1960ல் எழுத்து இதழில் வெளியான பாலையும் வாழையும் என்ற விமர்சனக் கட்டுரையின் மூலம் தமிழிலக்கிய வரலாற்றின் படைப்புலகிற்குள் பயணிக்க ஆரம்பித்து இன்றுவரை தனது ஆளுமையை இலக்கியம், நாடகம், ஓவியம் இசை, திரைப்படம், நாட்டார் இலக்கியம் என்ற அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டிலும் சரி, தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலும் சரி திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமர்சனப் பாணி தனித்துவம் பெற்றது.
1976ல் வெளியான இவருடைய முதல் விமர்சன நூலான பாலையும் வாழையும் என்ற நூலைத் தொடர்ந்து இவரது ஏனைய நூல்களான இலக்கிய ஊழல்கள், எதிர்ப்புக்குரல், அனுபவம், வெளிப்பாடு, கலை வாழ்க்கை, என் பார்வையில், அன்றைய வறட்சியில் இருந்து இன்றைய முயற்சிவரை, பாவைக்கூத்து, சில இலக்கிய ஆளுமைகள், அக்கிரகாரத்தில் கழுதை (சினிமாப்பிரதி) போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன. பழந்தமிழிலக்கியம், பேரிலக்கியம், நாட்டாரிலக்கியம் நவீன இலக்கியம், மேற்கத்தைய மரபு என்று கலை இலக்கியப் பார்வைகளை பல தளங்களில், வெவ்வேறு கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.
மரபிலக்கியங்களை விமர்சன முறையில் அணுகாத குறையைச் சுட்டிக்காட்டியவர். நாட்டாரிலக்கியங்கள் ஒரு சமூகத்தின் கூட்டுவெளிப்பாடு என்றும் அவை இயல்பான அவற்றிற்குரிய முறையில் வளர அனுமதிக்கப்படவேண்டும் என்ற வாதங்களை முன்வைத்தவர். நாட்டாரிலக்கியத்துறையில் பலரை ஆற்றுப்படுத்தியவர். நடை, கசடதபற, யாத்ரா, வைகை, கொல்லிப்பாவை, என்ற இதழ்களின் வரவுக்கும்,வளர்ச்சிக்கும் இவரது பங்களிப்புகளும் புதிய சிந்தனைகளும் உந்து சக்தியாக அமைந்தன.
எழுத்தாளன் எழுதும்போது ஒரு நிகழ்வு மட்டும் வெளிப்படுவதில்லை. அவனுடைய ஆளுமையும் கலந்தே வெளிப்படுகிறது என்று சொல்வார் வெங்கட் சாமிநாதன். தமிழ் இலக்கியத்துக்கு, குறிப்பாக விமர்சனத்துறையில் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிவரும் தொடர்ந்த சேவைக்காக திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2003ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.