2017 Awards |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2017) இவ்வருடம் வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன். தமிழ்நாட்டின் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்டவர். 60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதை தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் என படைத்துள்ளார். இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு இவர் குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. 'எல்லோர்க்கும் அன்புடன்' எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக வந்துள்ளன. நவீன தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் அதிக கவனம் பெற்றுள்ள இவருடைய படைப்புகள் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.
வாழ்வின் ஓரத்தில் உட்கார்ந்து அதன் மையத்தை உற்று நோக்குவதுபோல சிறுகதைகள் அமைப்பது இவரது சிறப்பு. அன்றாடம் கண்ணுக்கு படும் இயற்கை காட்சிகளும், சாதாரண மனிதர்கள் அனுபவிக்கும் சிக்கல்களும், அவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சம்பவங்களும் இவர் கதைகளில் வந்து போவதை காணலாம். 'வாசகனிடம் பெற்றதை அவனுக்கே திரும்ப நீண்ட கடிதமாக எழுதுகிறேன்' என்று அவர் தன் படைப்பை பற்றிக் கூறுகிறார்.சாகித்திய அகாடமி விருது, சிற்பி விருது, பாவலர் விருது, விஷ;ணுபுரம் வாசகர் வட்ட விருது மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இயல் விருதைப் பெறும் 19-வது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவரும், இலக்கியவாதிகளாலும், வாசகர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான வண்ணதாசன் அவர்களுக்கு, 2017-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது