2001 Iyal Award |
சுந்தர ராமசாமி 1931ல் நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951ல் தோட்டியின் மகனை மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951ல் புதுமைப்பித்தன் நினைவு மலரை அவர் வெளியிட்டபோது அவரது முதல் கதையான முதலும் முடிவும் அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் 60க்கு மேற்பட்ட சிறுகதைகளும் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988ல் காலச்சுவடு இதழை தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் பதிப்பித்தார்.
தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டு, பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளர்களிடையே ஒரு தொடர்பு மையமாக அவர் ஆற்றிய பணி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமானதாகும்.
இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான புளியமரத்தின் கதை ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஹிபுரு போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஜேஜே சில குறிப்புகள் நாவல் தமிழ் எழுத்து நடையிலும், கட்டுமானத்திலும், கருத்திலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. நவீனத் தமிழ் இலக்கியத்தில், இவர் எழுதிய நினைவோடைகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழுக்கு கிடைத்த பெரிய கொடை. தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் நேர்காணல்கள் அனைத்துமே அவரின் உயர்ந்த தரத்துக்கு சாட்சியங்கள். எந்தப் படைப்பென்றாலும் அக்கறையுடனும் ஆழமாகவும் விரிவாகவும் கலைத்தன்மை குலையாமலும் நேர்மையுடன் வெளிப்படுத்தியவர். தமிழ் நவீனத்துவத்தின் போக்குக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றியவர் திரு சுந்தர ராமசாமி.
கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் தொடர்ந்து ஆற்றிவந்த சேவைக்காக திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2001ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.