கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற்றபின்னர் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ரொறொன்ரோவில் 16 யூன் 2012 அன்று ஆற்றிய உரை. |
(எழுத்தில் மயூ மனோ) |
எல்லோருக்கும் வணக்கம்.
உலகினுடைய இன்னொரு கோடியாக நான் என்னுடைய வரைபடத்தில் பார்த்து, சின்ன வயதில் பூமி உருண்டையில் இந்தப் புள்ளியில் என்னுடைய ஊர் இருக்கு, இன்னொரு புள்ளியில் எந்தெந்த ஊர்கள் இருக்கு என்று தேடிப்பார்த்த என்னுடைய கனவு ஊர்களில் ஒன்றான கனடா தேசத்தில் இந்த தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகின்ற இயல் விருது பெறுவதற்காக உங்களை எல்லாம் சந்திப்பதற்கு வந்திருப்பதில் மிக ஆனந்தமாகவும் நெகிழ்வாகவும் இருக்கு. ஒரு எழுத்தாளனாக ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் எழுதிக்கொண்டு இருந்தபோதும் என் மனதில் நான் இன்னும் கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு சிறுவன்; பயத்தோடும், தயக்கத்தோடும், குழப்பத்தோடும் யாரோடு பேசுவது, யாரோடு பேசக்கூடாது என்பது தெரியாத ஒரு சிறுவனாகத்தான் நான் என்னை உணர்ந்திட்டு இருக்கிறேன். இந்தத் தருணத்தில இந்த மாதிரியான "Lifetime Achievement Award" என்கின்ற வார்த்தை எனக்கொரு பெரிய கனமாக இருக்கு. உண்மையில் சொல்வதாக இருந்தால் இந்த "Lifetime" அப்படி எனப்படுவது என்னைப் பொறுத்தமட்டில் நான் செய்ய விரும்புகிற பணிகளின் ஒரு முதலடியிலதான் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். மற்றும்படி இந்த விருதை எனக்கு வழங்குவதற்கு முன்வந்த தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கும் அதை இவ்வளவொரு செழுமையான ஒரு இலக்கிய அமைப்பாக உருவாக்கிய உங்களுக்கும் நன்றி. இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து, எனக்கு இந்த விருது கிடைத்தற்காக என்னைவிட அதிகமான சந்தோசத்தை நிறையப்பேர் அடைந்தார்கள். அது எனக்கு இந்த விருதை நான் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்கு முக்கியாமான காரணமாக இருந்தது. எல்லாவற்றையும்விட எப்போதுமே நான் வந்து என்னுடைய எல்லா அங்கீகாரங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய என்னுடைய மொழிக்கும் என்னுடைய ஊருக்கும் என்னை உருவாக்கிய என்னுடைய பெற்றோர்களுக்கும் நான் எழுதுவதற்கு அதிலும் குறிப்பாக முழுநேர எழுத்தாளனாக இயங்கி எழுதுவதற்கு எல்லா வழிகளிலும் துணையாக இருக்கக்கூடிய என்னுடைய பிள்ளைகள், என்னுடைய மனைவி, என்னுடைய நண்பர்கள், இன்னும் சொல்லப்போனால் முகந்தெரியாத ஏதேதோ நாட்டிலிருந்து தன்னுடைய கைகளை இங்கிருந்து அந்தத் தேசம் வரை நீட்டி என் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய எல்லா வாசகர்களுக்கும் நான் இந்தத் தருணத்தில நெகிழ்வோட நன்றி தெரிவிச்சுக்கிறேன்.
நான் இன்னைக்கு உங்களோட பேசணும்னு விரும்பின விஷயம் கதைகளைப் பற்றித்தான். ஏன் என்றால் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் கதைதான். நான் கதைகளைக் கேட்டு, கதைகளைப் படித்து, கதைகளிடமிருந்து உருவாகி, கதைகளால் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன். கதைதான் என்னை இந்த நகரத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறது. கதைதான் என்னுடைய எல்லா விருதுகளையும் எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. நான் கேட்ட கதைகள், அறிந்த கதைகள், சொன்ன கதைகள்; கிராமத்தில எப்போதும் சொல்வார்கள். கதை சொல்லுங்கள் என்று கேட்டால் எந்தக்கதை சொல்ல என்று கேட்பார்கள்; வாழ்ந்த கதையை சொல்லவா? வீழ்ந்த கதையை சொல்லவா? அப்படி என்று. தெரிஞ்ச கதையை சொல்லவா? இல்லை தெரியாத கதையை சொல்லவா? நாம ஜெயிச்ச கதையை சொல்லவா? தோத்த கதையை சொல்லவா? எந்தக் கதையைச் சொல்ல அப்படியென்று கேட்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையைக் கேட்பேன். வாழ்ந்த கதையைச் சொல்லுங்க என்றவுடனே எங்க பாட்டி உடனே நாங்க, எங்க குடும்பம் எப்படியெல்லாம் வாழ்ந்தது என்ற கதையை சொல்லுவாங்க. வீழ்ந்த கதையைச் சொல்லுங்க அப்படி என்றவுடனே எங்க குடும்பத்திலே எப்படியெல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்தோம் என்கிற கதையைச் சொல்லுவாங்க. எனக்கு என்னுடைய குடும்பத்தில இருந்து தொடங்கி என்னுடைய ஊரில இருக்கக்கூடிய எல்லோருமே கதையைச் சொல்லிக் கொடுத்தாங்க. அவர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளை உள்வாங்கிக் கொண்டு அந்தக் கதைகளை நானாகக் கற்பனை பண்ணி கற்பனை பண்ணி எழுதிக் கேட்டுப் பகிர்ந்து நான் கதைகளினூடாக வளர்க்கப்பட்ட ஒருத்தன்தான். இன்னைக்குங்கூட நான் எங்க போனாலும் கதை கேட்க விருப்பமானவனாகவும் கதை சொல்ல விருப்பமானவனாகவுந்தான் இருக்கிறேன். இதுதான் தமிழ் மரபு. தமிழ் கதை சொல்பவர்கள் இருந்தார்கள். ஊரூராகக் கதைகளைப் போய் சொன்னாங்க. இப்ப கூட என்னை நான் பாணர்களில் வரிசையில் ஒருவனாகத்தான் நினைக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் அங்கு கதை சொல்லி, கதை கேட்டு அங்கிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கிற உணைவை சாப்பிட்டு அவர்கள் வீட்டினுடைய ஒரு ஓரத்தில் படுத்துத் தூங்கி அவர்கள் அளிக்கிற பரிசை வாங்கிக்கொண்டு இன்னொரு ஊருக்கு நடந்துபோகின்ற பாணன் இருக்கிறானே அந்தப் பாணனில ஒருத்தன்தான் நானும். நான் ஒரு எழுத்தாளனா என்னை ஒருநாளும் உணர்றதே இல்லை. அந்தக் கதை சொல்லி அந்தக் காலத்தில கதை கேட்பதற்கு எதிர்ல மனிதர்கள் இருந்ததினால வீடு தேடித் போய்க் கேட்டான். இன்னைக்குக் கேட்கிற மனிதர்கள் குறைந்துபோனதனால காகிதத்தில எழுதி அச்சடிச்சு முகந்தெரியாத அந்த மனிதனுக்கு அந்தக் கதையைச் சொல்ல வேண்டியிருக்கு. முடிந்தால், சாத்தியமானால் உலகத்தில இருக்கக்கூடிய அத்தனை பேர் முன்னாடியும் கதை சொல்ல விரும்பக்கூடியவனாக நான் இருக்கிறேன். அது ஒரு வயதுக் குழந்தையாக இருந்தாலும், ஒரு பெரிய அரங்கிலே இருக்கக்கூடிய ஒரு பெரிய அறிஞர் சபையாக இருந்தாலும் அவர்கள் முன்னாடி கதை சொல்லும்போது மட்டுந்தான் என் மனது சந்தோசமடையுது. அதுபோலக் கதைகளைக் கேட்கவுந்தான். அதனால நான் கேட்ட, நான் அறிந்த, என்னை உருவாக்கிய கதைகளைத்தான் உங்ககூட பகிர்ந்துக்க வேணுமென்று நான் விரும்புறேன்.
சிறு வயதிலிருந்தே நான் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். அந்த வயதிலே எப்பவும் எனக்கு யாரோட பேசுறதென்று தெரியாது. என்னுடைய வீட்டில ஆறு பேர் இருந்தோம். ஆனாலும் கிராமத்தில வந்து எல்லோரும் ஆளுக்கொவ்வொரு பக்கம் விளையாடிட்டு இருக்கும்போது தெருவிலே வேறுமனாக உக்காந்து கொண்டு பேசுறதுக்கு ஆளில்லாமல் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த சிறுவன்தான் நான். தனக்குத்தானே பேசுவது தவறு அதனாலே அடுத்தவங்கிட்டதான் பேசணும் என்று ஒவ்வொரு நாளும் என்னையத் திருத்துவாங்க. "நீயா ஏன் பேசிட்டு இருக்க, அவனிட்ட பேசலாந்தானே" என்று. அப்ப நான் அவனிடம் பேசுறது என்பதற்குப் பதிலாக என் வீட்டுக்கு வெளியே நிற்கின்ற ஒரு ஆட்டுக் குட்டியிடம் பேசிட்டு இருப்பேன். என் வீட்டுக்கு வெளியே இருக்ககூடிய ஒரு காகத்திடம் பேசிட்டு இருப்பன். என் வீட்டில ஓடக்கூடிய ஒரு எலியோட, பூனையோட இன்னும் சொல்லப்போனால் நான் காபி குடித்து முடித்து வைத்திருக்கும் அந்த டம்ளர் மேலே வந்திருக்கக்கூடிய ஈயிடங்கூட கதை சொல்றதுக்கு விருப்பமாகப் பேசுறதற்குத் தயாராத்தான் இருப்பேன். ஒரு நிமிடம் அந்த ஈயை நான் கண்ணோடு கண் பார்த்திருக்கிறேன். அது சிறகடித்துத் திரும்பும்போது நான் கேட்பேன் "ஏன் அவ்வளவு பயந்துபோய்க் காபி குடிக்கிற, மிச்சந்தான் காபி இருக்கே, மெதுவாக் குடி" அப்படின்னு நான் சொல்லுவேன். உள்ளேயிருந்து என் அம்மா கேட்பாங்க, "யார்கிட்டே பேசிட்டிருக்கிறாய்?" என்று. "அந்த ஈயோடதான் பேசிட்டிருக்கிறேன்" அப்படின்னு சொல்வேன். அம்மா சிரிச்சிகிட்டே சொல்லுவாங்க, "பேசு, அதிலெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா அது என்ன பதில் சொல்லுது?" அப்படின்னு. "அதை சொல்லமாட்டேன் உங்ககிட்ட" அப்படின்பேன். அப்ப பேசுவதற்குப் பகிர்ந்து கொள்வதற்கு கேட்ட கதைகளைச் சொல்வதற்கு யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் எல்லோரும் இருக்கிறார்கள் என்று நான் நம்பிறேன். இங்கும் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்.
அந்த வயதில் ஒரு கதையைக் கேட்டேன். கதையைச் சொன்னது எனது மாமா. அவர் என்னைச் சின்னப் பையனா உட்கார வைச்சு சொன்னாரு; ஒரு காகத்திற்கு ஒரு நாள் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் தாகம் எடுத்த காகம் என்ன பண்ணுவதென்று தெரியாம சுத்திச் சுத்தி வரும்போது ஒரு பானையினுடைய அடியில கொஞ்சத் தண்ணீர் இருந்தது. இந்தத் தண்ணீரை எப்படிக் குடிப்பதேன்று தெரியாம ஒவ்வொரு கல்லாக எடுத்துப் போட்டு எடுத்துப் போட்டு நீரை மேலே வரவைத்துக் குடிச்சிட்டுப் பறந்து போயிட்டு என்று. அவர் சொன்ன கதையில் காகம் பறந்து போயிற்று. ஆனால் என்னுடைய மனதில் அன்றைக்குத்தான் அந்தக் காகம் பறக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளாக அந்தக் காகம் என் மனதில் பறந்திட்டேதான் இருக்கு. ஏனென்றால் அந்தக் காகம் தான் சிந்திக்கத் தெரிந்த முதல் காகம். அந்தக் காகத்திற்கு சிந்திக்கத் தெரிகிறது. தண்ணீரை மேலே கொண்டுவந்து குடிப்பது எப்படி என்று சிந்திக்கத் தெரிந்த காகமுள்ள ஊரில் பிறந்த பையனென்றால் அவனுக்கு எவ்வளவு கற்பனை இருக்கும். அப்ப எனக்கு அந்தக் காகம் ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறது; உலகை வெல்ல வேண்டுமென்றால் அதற்குரிய உபாயங்களை நீயே கற்றுக்கொள்ளலாம். எந்தப் பானையிலும் தண்ணீர் நிரம்பி இருக்காது. ஆனால் எல்லாப் பானையிலும் இருக்கக்கூடிய தண்ணீரையும் மேலே கொண்டு வருவதற்குத் தேவையான முயற்சிகள் போதும். நீ முயன்றால் உன்னால் கற்களைப் பொறுக்கி அதற்குள் போட முடிந்தால் அந்தத் தண்ணீரை மேலே குடிச்சிருவாய் அப்படி என்று. அந்தக் கதையைக் கேட்டு முடித்துத் திரும்பியவுடனே என் வீதியிலே, என் வாசலிலே, என் வீட்டடியில் மரங்களிலே இருக்கக்கூடிய அத்தனை காகங்களுமே அறிவாளிகளாக, சிந்திக்கக்கூடியவர்களாக, நான் பார்த்த திருட்டுக் காகமாக இல்லாம வழிகாட்டக்கூடிய காகங்களாக மாறிச்சு. அன்னைக்கிருந்து இன்னைக்கு நான் காகங்களைப் பார்க்கும்போதெல்லாம் பரவசம் அடைஞ்சிட்டே இருக்கறேன். இங்ககூட நான் நேற்றிரவு வந்தபோது முத்துலிங்கம் அவர்களிட்ட கேட்டேன், "கனடாவில காகம் இருக்கா?" அப்படின்னு. அவர் சொன்னார், "இருக்கு" அப்படின்னு. "ஆனா, எங்க ஊரு காக்கா இருக்கா?" ன்னு கேட்டேன். "இல்லை, கனடாக் காக்காதான் இருக்கு" அப்படின்னாரு. ஏன் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றால் அவர் காகத்தைப் பற்றி மிக அற்புதமான ஒரு குறிப்பைத் தன்னுடைய சிறுகதைத் தொகுப்பினுடைய சமர்ப்பணமாகத் தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் ஒரு வேட்டைக்காரன் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு காகத்தை எந்தத் தயவு தாட்சண்யமும் இல்லாமல் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அந்தக் காகத்தைச் சுட்டு வீழ்த்தினான். அது பாதியாக அறுபட்டு விழுந்தது. அந்த விழுந்த காகத்துக்கும் அதன் பிறக்காத குஞ்சுகளுக்கும்தான் தனது சிறுகதைத் தொகுப்பை முத்துலிங்கம் அர்ப்பணம் செய்திருக்கிறார். அந்தப் பிறக்காத குஞ்சுகளுக்காக யாரெல்லாம் கவலைப்படுகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்தாளர்களாக இருக்கிறாங்க. அந்தக் காகங்களுடைய வழியைப் பின்தொடர்ந்து யாரெல்லாம் போகிறார்களோ அவர்களெல்லாம் கற்பனையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நான் அந்த சிறுவயதில் துரத்திய அந்தக் காகம் என்னை எங்கெங்கயோ என்னுடைய கனவு தேசத்தில என்னையிட்டுப் போய்க்கிட்டே இருக்கு. இன்னுஞ்சொல்லப்போனால் நிறைய நேரங்களில் நான் இன்னொரு மறு கதையே எழுதியிருக்கிறேன். கல்லைப் போட்டுக்கொண்டே இருந்த காகம் ஒரு கல்லை ஜாஸ்தியாகப் போட்டவுடனே பானை நிறைந்து, தண்ணீர் வழிந்து, தரையில் ஓட ஆரம்பிச்சவுடனே காகத்திற்கு தரையில ஓடுற தண்ணீரை என்ன செய்றதென்று தெரியல அப்படின்னு கற்பனை எனக்குத் தோணுது. ஆகக் கதைகள்தான் என்னை உருவாக்கியது. சிறுவயதிலிருந்தே நான் கேட்ட, படித்த கதைகளெல்லாம். அப்ப அதே வயதிலே என் மாமா இன்னொரு கதையை, ஒரு நிஜக் கதையென்று ஒரு சம்பவத்தை சொன்னார். இன்றுங்கூட என்னால மறக்கவியலாத சம்பவம் அது. நூறு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒரு சர்க்கஸில் ஒரு யானை இருந்தது. போஸோ என்கின்றது அந்த யானையுடைய பெயர். அந்த யானையை இந்தியாவிலிருந்து சர்க்கசுக்காகப் பிடித்துக்கொண்டு வந்து சர்க்கசிற்காக லண்டனில் விட்டிட்டாங்க. சர்க்கஸில் விடப்பட்ட அந்தப் போஸோ எனப்படுகின்ற யானை என்ன பண்ணிச்சு அப்படின்னா வித்தை காட்டுவதற்காகவும், வேடிக்கை காட்டுவதற்காகவும், எல்லாருடைய கேளிக்கைக்குமான ஒரு பொருளாகவுந்தான் அங்கிருந்தது. மிருகங்களை ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றி வித்தை காட்டுவதாக மாற்றியதுதான் மனிதனுடைய மிகப்பெரிய அவமானத்துக்குரிய ஒரு செயல். அதிலையும் யானைகளை அவமதிப்பது இருக்கில்லையா உலகம்பூராவும் தொடர்ந்து நடக்கக்கூடியது. அப்படித்தான் அன்னைக்கு அதைப் பிடிச்சுக் கொண்டுபோய் லண்டனில இருக்கக்கூடிய சர்க்கசில அதை வந்து ஒரு முக்காலியில ஏறி நிறுத்திவைச்சு கைதட்டு வாங்கித் தரக்கூடிய யானையாக அதை வைத்திருந்தார்கள். அந்த யானையும் அந்த வேலைகளை எல்லாம் செய்திட்டிருந்தது. திடீர்னு ஒருநாள் அந்த யானை தன்னுடைய எல்லா வேலைகளையும் செய்ய மறுத்து, கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடாம, கொஞ்சங் கொஞ்சமா அது கோபமாகிக் கத்தத் தொடங்கி இயல்பான தன்னுடைய எல்லா வாழ்க்கையையும் முடிச்சிருச்சு. அப்ப அந்த சர்க்கஸ்காரனுக்கு தோணிச்சி, இந்த யானையை வைச்சு இனி என்ன பண்றதேன்று தெரியலையே. ஏனென்றால் ஏந்த வேலையும் செய்யாது, சாப்பிடாது, எப்போதுமே ஒரே இடத்தில அந்த யானை சலனமில்லாது நின்னுட்டே இருக்கும். எந்தக் கட்டளைக்கும் கீழ்ப்படியாது. அப்ப அந்த சர்க்கசினுடைய உரிமையாளன் ஒரு முடிவு பண்ணினான். இந்த யானையைக் கொல்லப்போறேன். ஆனா அதைக் கொல்வதை ஒரு நிகழ்ச்சியாகக் காட்டப்போறேன். நாளைக்கு எல்லோர் முன்னாடியும் இந்த யானையை இதே சர்க்கசில வெளியில கொண்டு வந்து நிறுத்தி; பார்க்க விரும்புபவர்கள் கட்டணம் கொடுத்தால் எல்லோரும் வந்தமர்ந்து பார்க்கலாம். யானையைக் கொல்லப் போறேன் என்று ஒரு அறிவிப்புக் கொடுத்தான். அதற்காக நிறைய மக்கள் பணம் கொடுத்தார்கள். அதுவும் கூட ஆச்சரியம் என்னென்னா ஒரு மனிதன் ஒரு உயிரினத்தைக் கொல்லுவதை வேடிக்கை பார்க்கிறதுக்குப் பணம் கொடுத்துப் பார்க்கிறவனும் இருக்கத்தான் செய்கிறான். அப்படிப் பணம் கொடுத்துப் பார்க்கிறதற்கு எல்லோரும் கூடும்போது அந்த அரங்கத்தில் ஒருவர் உள்ளே நுழைந்து; டிக்கெட் வாங்கிட்டுத்தான் நுழைஞ்சார். உள்ளே நுழைஞ்சு அந்த சர்க்கஸ் உரிமையாளரிடம் கேட்டாரு, "அந்த யானையை நான் பார்க்கலாமா" அப்படின்னு. "பார்க்காதீங்க, அது மதம் பிடிச்ச யானை. கொல்லப் போறோம். பத்து நிமிடங் கழித்து அது செத்துப் போயிரும். செத்துப் போனதற்குப் பின்னாடி புகைப்படம் எடுத்துக்கோங்க" என்று சொன்னாரு. அப்ப சொன்னாரு,"இல்லை, அந்த யானையை நான் பார்க்கணும். ஐந்தே ஐந்து நிமிடங்கள் எனக்கு அவகாசங் கொடுங்க. நான் அந்த யானையைப் பக்கத்தில போயிப் பார்க்கிறேன்" அப்படின்ன உடனே கூண்டை நோக்கி அனுப்பினாங்க. ஒரு சங்கிலியிடப்பட்ட பெரிய இடத்துக்குள்ள யானை தனியே நின்றிருந்தது; இருட்டறைக்குள்ளே. அவர் உள்ளே போனாரு. இரண்டு நிமிடம், மூன்று நிமிடம், ஐந்து நிமிடம், பத்து நிமிடமானது. அவர் வெளியே வரவில்லை. பத்து நிமிடங் கழித்து அந்த யானை சாதாரணமாக நடந்து எந்தக் கோபமுமில்லாமல் இயல்பாக இதுக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதே போல வந்தது; முக்காலியில் ஏறியது. விளையாட்டெல்லாம் காட்டியது. சர்க்கஸ் உரிமையாளருக்குப் புரியவேயில்லை. "என்ன பண்ணினே, என்ன சொன்னே அந்த யானைக்கிட்டே? எப்படி இந்த யானை இயல்புக்குத் திரும்பியது?" அப்படின்னு சொன்னவுடனே அவர் சொன்னாரு,
"ஒன்றுமே இல்லை, இவ்வளவு நாட்களாக அந்த யானை ஒரு விஷயத்தை மறந்து போயிருந்தது. அதற்காக ஏங்கிக் கொண்டேயிருந்தது. அந்த விஷயத்தை யானைக்கு நினைவுபடுத்தினேன். அதனால அந்த யானை இயல்புக்குத் திரும்பிருச்சு."
"என்ன அப்படி செய்தாய்"
"அந்த யானை இந்தியாவில் பிடித்துக் கொண்டுவரப்பட்ட யானை. அதற்கு இந்தியர்கள் பேசும் மொழியைக் கேட்டே பல நாளகிருச்சு. அது ஒரு ஹிந்தி வார்த்தையை, ஹிந்தி பேசும் மனிதனிடம் கேட்க விரும்பியது. அதற்குப் பக்கத்தில் போய் நான் ஹிந்தியில பத்து வார்த்தைகள் சொன்னேன். நான் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்கேன். உன்னைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்திருக்கிறேன். உனக்கு நான் பேசுறது புரியும்னு நான் நினைக்கிறேன்னு சொன்னேன். அந்த யானை என்னுடைய மொழியைப் புரிந்து கொண்டு திரும்பி வந்திருச்சு. தயவுசெய்து யானையைக் கொல்லாதீங்க. அந்த மொழி தெரிஞ்ச ஒருவனை இந்த யானைக்குத் துணையாக வையுங்க, அது போதும்." என்று சொன்னார்.
அந்தக் கதையை நான் எப்பவோ கேட்டேன்; இன்னைக்கு வரைக்கும் தோன்றுகிறது. எங்கெல்லாம் நாம் செல்கிறோமோ அங்கெல்லாம் நமக்கு வேறு மனிதனே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மொழி தெரிந்த ஒரே ஒருத்தன் தேவை. இந்த ஊரில வெளில எத்தனையோ பேரு எவ்வளவோ ஏங்கினாக்கூட தமிழ் பேசுற ஒருத்தனைப் பார்த்தவுடனேயே அவர் யாரா இருந்தாலும் ஒரு நெருக்கம் வந்திடுது இல்லையா? நாம் எங்கே போனாலும் நம்மை ஒன்றிணைப்பது நம்முடைய மொழி. நம்முடைய அடையாளம் அந்த மொழி, ஒரு ஜீவனாக, அது ஒரு பேசமுடியாத ஒரு யானையாக இருந்தாலுங்கூட அது தான் கேட்டுப் பழகிய, நினைவுகளில் பதிந்திருக்கக்கூடிய மொழியை சாதாரணமாக மறந்து போய்விடாது. அந்த மொழி அதற்கு உயிரையே கொடுத்திச்சு. போகும்போது இந்த சர்க்கஸ் உரிமையாளர் கேட்டாரு, "எப்படி இவ்வளவு நுட்பமா ஒரு யானைக்கு என்ன பிரச்சினை என்றுகூடத் தெரிஞ்சுகிட்டு அதுக்கிட்டப் போயி அதன் மொழியைப் பேசி, யானையை சரிப்படுத்திக் கூட்டிட்டு வந்தீங்களே, நீங்க யாரு?" அப்படின்னு கேட்டப்போ அவரு ஒரு பேனாவை வாங்கி ஒரு பேப்பர்ல கையெழுத்துப் போட்டு எழுதிக் கொடுத்தாரு. அவரு பெயர் வந்து ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) அப்படின்னு சொல்லப்படக்கூடிய பிரிட்டிஷினுடைய மிகப்பெரிய எழுத்தாளர்.
ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்துக்காக என்ன செய்ய முடியும்னா மரணத்துக்காகக் காத்திருக்கக்கூடிய ஒரு யானையிடங்கூட அதன் தாய் மொழியில் பேசி அதை இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கமுடியும். இன்னுஞ்சொல்வதாக இருந்தால் எங்கெல்லாம் மொழி மறக்கடிக்கப்படுகிறதோ மொழிக்கும் இலக்கியத்திற்கும் அந்த மொழியையும் இலக்கியத்தையும் தன்னுடைய மூச்சாகக் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் துயரம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஒரு எழுத்தாளனுக்குத் தேவை இருக்கு. அங்கெல்லாம் எழுத்தாளர்கள் தானறிந்த அந்த விஷயத்தை ரகசியமாக; என்ன பேசினார் யாருக்குத் தெரியும்? எனக்கு அந்தக் காட்சி மனதில இன்னைக்கும் தோன்றிட்டே இருக்கு. யானைட்ட என்ன சொல்லியிருப்பாரு அவரு? என்ன சொல்லி அந்த யானையை மயக்கி, அந்த யானையினுடைய மௌனத்தைக் கலைச்சுக் கூட்டிட்டு வந்தாரு? தெரியாது; ஆனால் எழுத்தாளர்களால அது முடியும். ஏதோ ஒரு வகையில நான் நம்பிறேன்; அந்த எழுத்தாளன் அந்த யானையிடம் ஏதோ ஒரு கதையை, முதல் வரியை, ஒரு சொல்லை, ஒரு நினைவை ஊட்டுறான். இந்தக் கதை, இந்த சம்பவம் என் வாழ்க்கைல எல்லா நேரங்களிலும் நான் தனியே இருக்கும்போதெல்லாம் அந்தக் காட்சி நினைவிலேயே வந்திட்டே இருக்கு. திரும்பத் திரும்ப உயிர் காப்பாற்றப்பட்ட யானையும் அதற்குப் பின்னால இருக்கக்கூடிய ஒரு எழுத்தாளனின் பொறுப்புணர்ச்சியும் வந்திட்டேயிருக்கு. கதைகள் வெறுமனாக நாம கேட்டு மறந்திட்டுப் போறதுக்கான கதைகள் கிடையாது. கதைகள் தான் நம் ஞாபகத்தினுடைய ஒரே தொகுப்பு. இந்த உலகத்தில இருக்கக்கூடிய அத்தனை கோடி மனிதர்களை விடவும் அதிகமாகக் கதைகள் இருக்கிறது. இந்த மொத்த மனிதர்கள் கேட்டாலும் கேட்டுத் தீர முடியாத அளவுக்குக் கதைகள் இருக்கிறது. எதுக்கு மனிதர்களுக்கு இவ்வளவு கதைகள்? உண்மைல கதைகள் அல்ல அவை. அவையெல்லாம் நம்முடைய நினைவுகள். என்னுடைய அப்பாவைப்பற்றி, என்னுடைய தாத்தாவைப்பற்றி, என்னுடைய ஊரைப்பற்றி, ஊரில இருக்கக்கூடிய ஒரு மரத்தைப்பற்றி, அங்கிருக்கக்கூடிய இறந்தவர்களைப்பற்றி இப்படி சொல்லிக்கிட்டே போறதுக்கு எல்லோருக்குமே நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கு. ஏனென்றால் நம் நினைவு மறதி என்றதொரு நோயால் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும். மறதியிடமிருந்து நினைவைக் காப்பாற்றுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; அதுதான் கதை. ஒரு நினைவு கதையாகிவிட்டால் அதற்குப் பிறகு அதற்கு மறதியே கிடையாது. அது வாழ்நாள் முழுவதும் அது கதையாக தனக்கென்று ஒரு ஒளியை வீசிக்கொண்டு அந்தக் கதை இருந்திட்டே இருக்கும். எத்தனையோ பேர் கதாபாத்திரங்களாக ஆனதினதாலேயே கதை உலகத்திலே இருந்திட்டே இருக்கிறாங்க. உலகத்திலே நான் இதுவரைக்கும் சிந்துபாத்தைப் பார்த்ததே கிடையாது. ஆனால் கதை வழியாக சிந்துபாத்தை மனதிலே இருந்திட்டே இருக்கிறான். நான் பார்த்தறியாத எத்தனையோ ஜீவராசிகளும் மனிதர்களும் கதைகளின் வழியாக இருக்கிறார்கள்னா நம் நினைவுகள்தான் கதைகளாக மாறிட்டேயிருக்கு. நாம்தான் கதைகளாக மாறிட்டேயிருக்கோம். நம் வாழ்க்கைதான் கதைகளாக மாறிட்டேயிருக்கு. என்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு ஆயிரம் பக்கம் எழுதுவதைவிட ஒரே ஒரு கதையைச் சொல்லி பிள்ளைகளுக்கு அதைப் புரிய வைச்சிர முடியும். ஆகக் கதைகள் என்பது வெறுமனாக பொழுதுபோக்குக்காக சொல்லப்படக்கூடிய விசயமல்ல. அவை நம் பண்பாட்டினுடைய நினைவுகள். தனிமனிதனுக்கு நினைவுகள் இருப்பது போல இந்த சமூகத்திற்கும் நினைவுகள் இருக்கிறது. இந்த ஊருக்கும் நினைவுகள் இருக்கிறது.
இன்னைக்கு நான் ஒரு ஏரிக்குப் போனேன். அந்த ஏரியில் போய் நின்று கொண்டு நான் ஒரு கல்லை எடுத்து அந்த எரியில போட்டேன். நண்பர் கேட்டாரு, "என்ன செய்றீங்க?" அப்படின்னு. "இங்க இருக்கிற ஒரு பொருளை ஒரு கல்லை நான் அங்க போட்டேன், இனி எத்தனை நூற்றாண்டுகள் கழித்து அது திரும்பிக் கரைக்கு வரும்?" யாருக்குத் தெரியும்? நான் செய்த ஒரு சின்ன வேலை; இங்கிருக்கிற கல்லைத் தூக்கி அந்தத் தண்ணிக்குள்ள போட்டதுதான். அது தற்செயலான ஒரு சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால் உலகத்தில ஒரு கல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்திடுச்சின்னா என்னைக்கு அது கரைக்கு வரும்? தெரியவே தெரியாது. இன்னொன்று நான் இங்கே வந்தேன் என்பதற்கு நினைவாக தண்ணிக்குள்ள ஒரு கல்லைப் போட்டிட்டு வந்திருக்கேன். அந்தக்கல் இருக்கிறவரைக்கும் என்னுடைய நினைவு அங்கிருக்கும். ஏனென்றால் எந்தத் தண்ணீராலேயும் கல்லைக் கரைச்சிட முடியாது. ஆக நான் ஒரு செயலைச் செய்யும்போது மொழியில்லாமலே செய்ய முடிகிற தருணம் இருக்கு. மொழியே பயன்படுத்தப்படாமல் என்னுடைய இருப்பை நான் வந்து அங்கு உணர்த்த முடியுது. இந்த மொழி தேவைப்படக்கூடிய இருப்பு எங்கே வருது அப்படின்னால், நினைவுகளை நாம சேகரம் பண்ணி பாதுகாத்து வைக்க வேணுமென்று ஏன் நினைக்கிறோம் அப்படின்னா அது எனக்கு நடந்தது மட்டுமல்ல இந்த உலகிற்கு சொல்லவேண்டியது.
பைபிள் வாசித்தவர்களுக்கேல்லாம் ஒரு அத்தியாயம் நினைவிருக்கும். பைபிளில் லோத் என்ற ஒருவன் இருக்கிறான். சொடொம் என்ற ஒரு நகரம் இருந்தது. அந்த சொடொம் என்கின்ற நகரத்தை அழிப்பதென்று கடவுள் முடிவு செய்து அந்த நகரத்தை அழிக்கும்போது சொடொம் நகரத்தைவிட்டு லோத்தையும், லோத்தினுடைய மனைவியையும் குடும்பத்தையும் வெளியேறிப் போகுமாறு சொன்னார். எல்லோரும் வெளியேறிப் போனார்கள். வெளியேறிப் போகும்போது கடவுள் ஒரு கட்டளையிட்டார்; "யாரும் வெளியேறிப் போகிறவர்கள் திரும்பிப் பார்க்காதீங்க. யார் திரும்பிப் பார்த்தாலும் உப்புப் பாறையாக மாறிவிடுவீங்க. அதால திரும்பிப் பார்க்காதீர்கள்." லோத்தும் லோத்தினுடைய மனைவியும் பிள்ளைகளும் அந்த ஊரைவிட்டு வெளியேறிப் போனாங்க. போயிட்டு இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில நின்னுட்டு லோத்தினுடைய மனைவி திரும்பிப் பார்க்க விரும்பினாள். திரும்பிப் பார்க்க ஏன் விரும்பினான்னா தான் பிறந்து வளர்ந்த ஊரை, தன்னுடைய பிள்ளைகள் பிறந்த ஊரை, ஏந்த ஊரில திருமணம் பண்ணிக்கிட்டமோ அந்த ஊரை, ஒவ்வொரு நாளாக எண்ணிஎண்ணி செலவழித்த அந்த ஊரை, இனிமேல் பார்க்கவே முடியாது என்றால் கடைசியாக ஒருதடவை பார்க்கக் கூடாதா என்ன? ஒரு கணம் தான், ஒரேஒரு நிமிடந்தான் அவள் திரும்பிப் பார்த்தாள். அப்படியே உப்புப்பாறையாக மாறிட்டாள். இன்னைக்குங்கூட எருசெலம் நகர்ல அந்த உப்புப்பாறை இருக்கு. அந்த உப்புப்பாறை ஒரு பெரிய கல்லாக இருக்கு. அந்தப்பாறையாக இருப்பவள் தான் லோத்தினுடைய மனைவியென்று சொல்கிறார்கள். இது லோத்திற்கு நடந்ததா, உண்மையா, அது ஒரு கட்டுக்கதையா என்றெனக்குத் தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன்; உலகத்திலேயிருக்கும் அத்தனை பெண்களும் தன்னுடைய சொந்த ஊரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த ஊரை, இழந்த வாழ்க்கையை எதையெல்லாம் விட்டிட்டு வந்தார்களோ அதையெல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். லோத்தினுடைய மனைவிகள்தான் நாம எல்லோருமே. ஏனென்றால் அந்த ஒரு கணத்துக்காக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம்தானே. திரும்பிப் பார்த்தால் உப்பாகிடுவோம்னா ஆகட்டும் பரவாயில்லை. ஆனால் அந்த திரும்பிப் பார்க்கும் கணத்திலே எல்லாம் கிடைத்து விடுகிறதில்லையா? இன்னொரு முறை அந்த வாழ்க்கை நமக்குக் கிடைக்காதென்றால் கட்டாயமாக கடைசியா ஒருதடவை அதை திரும்பிப் பார்க்கிறதில என்ன இருக்கு? ஆனால் அப்படித் திரும்பிப் பார்த்தால் எனக்கு அந்த ஒரு சம்பவம் திரும்பத் திரும்ப நினைவுகளாக மாறிட்டே இருக்கு. எப்படின்னா உப்போட பெண்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு ஆண்களுக்குத் தெரியவே தெரியாது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் உப்பின் வழியாகத்தான் ஒன்றிணைகிறாள். ஒரு கணவனுக்கும் மனைவிக்குமிடையே வரக்கூடிய பெரிய சண்டையே உப்பாலதான் ஏற்படுது. உப்புதான் ஒரு கணவனுக்குத் தெரிந்த முதல் பிரச்சினையே. உப்பு சரியில்லை, உப்பு அதிகமாப் போடுற, உப்புக் குறைவாப் போடுற; ஏனென்றால் அவன் அம்மா அவனுக்கொரு உப்புப் போட்டுக் காட்டியிருக்காங்க. அம்மா ஒரு உணவைக் கொடுத்து உப்பை சேர்த்திருக்காங்க. மனைவி ஒரு உப்பைப் போடும்போது அம்மா போடுற அளவில அது இல்லை; அல்லது கூட இருக்கு, குறைய இருக்கு. உப்புப் பழகுவதுதான் திருமணத்தினுடைய ஒரு இதுவே. அது ஒரு ஆண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டென்று ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அப்புறம் பழகிடும். அதற்கப்புறம் அவனுக்கு அவன் அம்மா வீட்டில போய் சாப்பிடுவான். சாப்பிடும்போது ஏம்மா உப்புக் கம்மியாப் போட்டிருக்கிறாய் அப்படின்னு கேட்பான். ஏனென்றால் உப்புப் பழகிருச்சு. உப்போடு பெண்களுக்கிருக்கக்கூடிய உறவென்பது அற்புதமான ஒன்று. ஏனென்றல் அவர்கள் அதை வெறுமனாக ருசிக்கான ஒன்றாகத் தருவதில்லை. அதுக்காக மட்டும் எடுத்துப் போடுறதில்லை. சமையல் பண்ணிட்டிருக்கும்போது, நான் அடுக்களையிலேயே சமையல் கட்டிலேயே வளர்ந்த சிறுவன். பேசிட்டே இருக்கும்போது எங்க அம்மா அப்படியே உப்பைக் கையிலே எடுப்பாங்க. அப்படி எடுக்கும்போது விரல் நுனியில அது ஒரு பூ மாதிரித்தான் ஒட்டிட்டு இருக்கும். அப்படியே போடுவாங்க. "எப்படிம்மா உனக்குத் தெரியும்? இவ்வளவு பெரிய பாத்திரத்தில இருக்கக்கூடியதில இவ்வளவுதான் சிட்டிகை போடணும்னு?" கேட்டா அப்ப அவங்க சொல்லுவாங்க, "அந்த சமைக்கிறதில முக்கியம் மனசுதாண்டா, கையில்லை. மனது சந்தோசமாக இருந்தால் விரலில சரியான அளவுதான் உப்பு வரும். பிடிக்காத ஒருத்தர் வீட்டுக்கு வாரார்னு வையுங்களேன் அப்ப உப்புத் தானே ஜாஸ்தியாகும். அது நாம விரும்பல. ஏன்னா அவருக்கு ஏன் சமைக்கணும் நாம அப்படின்னு நினைக்கிறோம்". அப்ப உப்போட உள்ள உறவு வெறுமனான உறவல்ல. அது நம்மளோட பந்தம். அந்த பந்தம் ஏதோ ஒரு வகையில ஊரோட சம்பந்தப்பட்டது. ஊரைத் திரும்பிப் பார்க்கிறதென்பது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல. ஏதோ ஒரு ஊரில, இங்க ஒரு அறையில நான் தூங்கிட்டிருக்கேன். நடுராத்திரியில எனக்குத் திரும்பிப் பார்க்கும்போது தோன்றுகிறது எங்கேயிருக்கிறேன் நான்? என்னுடைய ஊர் எது? யோசித்துப் பார்த்தால் எங்கேயோ தொலைவிலே என்னுடைய ஊர் இருக்கு. ஆனால் இவ்வளவு தூரத்துக்கு அப்பாலேயும் என்னுடைய ஊர் என்னைப் பார்த்திட்டிருக்கு. உலகினுடைய எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருக்குப் போனவுடனே நான் என்னுடைய ஊர் என்கிற அளவுகோலை வைச்சுத்தான் நான் அளக்கிறேன். இந்த ஊருக்கு வந்த உடனே எங்க ஊரை விட இது பெரிசா இருக்கு; எங்க ஊரைவிட இந்தக் கட்டிடம் இங்க அதிகமா இருக்கு; இங்க மனிதர்கள் இருக்காங்க என்று. ஒவ்வொருவரும் தங்களுடைய ஊரை ஒரு அளவுகோல் போல எங்கு போனாலும் எடுத்து கிட்டேயிருப்பாங்க. இன்னொன்று ஊர் என்பது வெறுமனாக இடமல்ல. அங்கு வாழ்ந்த மனிதர்கள், இறந்தவர்கள், இருப்பவர்கள், நம்மோடு பழகியவர்கள், நண்பர்கள், எத்தனையோ பேரை அது நினைவுபடுத்திட்டே இருக்கும். ஆக ஒரு ஊரை ஒரு மனிதன் சுமந்திட்டே இருக்கான். வாழ்நாள் முழுக்க அவனுக்குள்ள அந்த ஊர் இருந்துகிட்டே இருக்கு. அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு மனிதனைப் பார்த்த உடனேயே அவனறியாமலே அந்த ஊரைப் பார்க்கிற மாதிரி இருக்கும்.
ஒரு முதியவர் எங்க கிராமத்தில இருக்கக்கூடிய விவசாயி. விவசாயம் பொய்த்துப் போய் பிழைப்பதற்கு வழியில்லாமல் நிலத்தையெல்லாம் வித்திட்டு பிள்ளைகளைக் கூட்டிட்டு ஊரை விட்டிட்டுப் போயிட்டாரு. நான் என்னுடைய பத்து வயதில அவங்களைப் பார்த்தேன். சமீபமாக ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னாடி ஒருநாள் அவரை நான் ரயிலில பார்த்தேன். அவர் ரயிலில் சாதாரணமான கைக்குட்டைகள் அல்லது இந்த ஊக்கு விற்கக்கூடிய ஒரு ஆளாக வித்திட்டிருக்கிறாரு. ஒரு விவசாயி இந்தமாதிரி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிட்டாரே என்று எனக்கு ஆதங்கமாயிருந்தது. அவரைப் பார்த்து, "ஐயா எப்படி இருக்கிறீங்க?" ன்னு கேட்டவுடனே அவரு ஒண்ணுமே சொல்லல. என்னுடைய கைகளை அப்படியே ஒரு நிமிடம் பிடிச்சிட்டே இருந்தாரு. "வரட்டா" அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. நான் உணர்ந்தேன், அவரு என்னுடைய கையை அல்ல; என்னுடைய ஊரை ஒரு நிமிடம் அவரு தொட்டுப் பார்க்கிறாரு. தான் திரும்பிப் போகமுடியாத அந்த ஊரை நான் அந்த ஊருக்குப் போயிற்றுப் போயிற்று வந்திட்டிருக்கேன் என்கிறதினால என் வழியால் தொட்டிடலாம் என்று நினைக்கிறாரு. ஆக எங்கோ ஒரு இடத்தில் ஆழமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தொடுகிறதென்பது அற்புதமான ஒன்று. ரொம்பக்காலமா நான் நினைச்சிட்டிருக்கேன் கண்தான் உலகத்தில ரொம்பப் பெரியது; எங்கோ இருக்கிறதெல்லாம் பார்க்குதே அப்படின்னு. கண்ணால் தொடமுடிஞ்ச ஒன்றைக் கையால் தொட முடிஞ்சதில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கேன். ஆனால் அந்தத் தருணத்திலே உணர்ந்தேன் கண்ணல்ல கைதான். கைதொடும் ஆழம் இருக்குதில்லையா அதற்கு நிகர் வேறெதுவும் கிடையாது. வெறுமனாக கை இன்னொரு மனிதனைத் தொடுறதேயில்லை; அவனுடைய இதயத்தைத் தொடுகிறது; இதயத்தில் மறைந்திருக்கக்கூடிய ரகசியத்தைத் தொடுகிறது; இன்னுஞ் சொல்லப்போனால் ஆழமான அன்பை இந்தக் கையினுடைய வெதுவெதுப்பு நமக்குக் காட்டிக் கொடுக்குது. அப்ப கதைகள் எங்கிருந்து வருது அப்படின்னா வாழ்க்கையின் இத்தனை விசயங்களும் ஒன்று சேர்ந்ததுதான் கதைகள். இந்தக் கதைகள் ஊரின் வழியாக, மனிதர்கள் வழியாக, நினைவுகளின் வழியாக மாறி மாறி வந்திட்டே இருக்கு.
ஒரு திரைப்படம் பார்த்திட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தில ஒரு வசனம் வந்தது. ஒரு அப்பா மகனைப் பார்த்து "நிறையக்கதைகளை உனக்கு சொல்லிச் சொல்லிச் சொல்லி வளர்த்தவன். கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அந்தக் கதைகளையெல்லாம் மறந்து நீ ஏதேதோ கதைகளை சொல்ல ஆரம்பிச்சிட்டாய். அப்பா என்பதே உனக்கு கதை சொல்கிற ஆளாத்தான் மாறிட்டாரு" அப்படின்னு அப்பா சொல்றாரு. பையன் சொல்றான், "அப்பா உங்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நீங்கள் எனக்கு என்னென்ன செய்தீங்க, என்னென்ன செய்யல என்கிறதெல்லாம் மறந்திருச்சு. ஆனால் நீங்க சொன்ன கதைகளெல்லாம் ஞாபகத்திலிருந்துகிட்டே இருக்கு". அப்ப ஒரு அப்பா ஒரு பிள்ளைக்கு எதையாவது ஒன்றைக் கொடுக்கிறார் என்றால் அவர் ஒரு கதையைக் கொடுத்திருக்கிறாரு. என்னுடைய அப்பா எனக்குக் கொடுத்திருக்கிறாரு, நான் எனது பிள்ளைகளுக்குக் கொடுத்திருக்கிறேன். யார் யாரோ யார் யாருக்கோ கொடுத்திட்டேயிருந்திருக்கிறாங்க. அப்ப அடிப்படையிலே நாம் கதைகளை பரிமாறிட்டே இருக்கோம். முடிவில்லாமல் பரிமாறிட்டே இருக்கிறோம். எத்தனையோ கதைகள் இருக்கு உலகத்தில; சொல்லமுடியுமா யாராவது? நான் ஒருமுறை, இதுதான் என்னுடைய டாக்டர் பட்டம் பெறுவதற்கான ஆய்வாக எடுத்து செய்தேன். எவ்வளவு கதைகள் இருக்கு? எவ்வளவு மாதிரிகள் இருக்கு என்கிறதைப் பற்றி. அப்ப எனக்கு ஒரு கதையினுடைய ஒரு வரி படிச்சிட்டு இருக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இதற்கு நிகராக எந்த மொழியிலாவது ஒரு கதை இருக்கா அப்படின்னு தேடினேன். மிகக் குறைவான சொற்களில ஒரு வாக்கியத்தில எந்தெந்த மொழிகளிலெல்லாம் கதை இருக்கோ, அந்த மொழிகளிலெல்லாம் கதை சொல்வதில் திறமையானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப் பார்த்தால் தமிழில் ஒரு கதை இருக்கு. ஒரே ஒரு வரிதான் கதை. அந்தக் கதைக்கு நிகரான கதையை உலகத்தில நான் வாசிக்கவே இல்லை. அந்தக்கதை என்னென்னா "ஒரு ஊரில ஒரு நரி. அதோட கதை சரி.’ ஒரு ஊரில ஒரு நரி என்று சொல்லப்படக்கூடிய அந்த ஒரு வாசகத்திலேயே ஒரு கதை இருக்கு. அப்புறம் அந்த நரி என்ன பண்ணிச்சு? அதைக் கேட்பவர்கள் முடிவு பண்ணிக்கிறாங்க. அப்ப ஒரு வாசகனை, கேட்பவனை எழுத்தாளனுக்கு இணையானவனாக மாற்றுகின்ற ஒரு சமூகம் நம்மளோட சமூகம். நம்முடைய கதை மரபில் கேட்பவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள். நம்மைவிட அறிவாளிகள். நம்மைவிட கற்பனை நயம் மிக்கவர்கள். அவர்களுக்குத் தெரியும், ஒரு ஊரில ஒரு நரின்னு சொன்னாலே மிச்சம் அந்த நரி என்ன செய்திச்சு, யாரை எமாத்திச்சு, ஏன் ஏமாத்திச்சு; அவர்களாகவே கதையை சொல்லிடுவாங்க. அத்தோட கதை சரி. இதைப்பற்றி ஒரு நண்பரோட பேசிட்டிருக்கும்போது அவர் ஒரு சம்பவம் சொன்னாரு; மொழியில்லாமலே ஒரு விஷயம் நடந்திச்சு, அதை நான் சொல்றேன். என்ன அப்படின்னா ஒரு புத்த மதத் துறவி ஒரு மடாலயத்தில இருந்து கிளம்பி பயணம் போயிட்டிருக்கும்போது வழியில தங்குவதற்காக ஓரிடத்திற்குப் போனாரு. அவர் போன இடத்தில் தங்கிற சத்திரத்தில் நிறையப் பேர் தங்கியிருந்ததினால இடமில்லை. ஆனால் இவர் தங்கிறதுக்கு இடம் வேணுமென்று கேட்டவுடனே அந்தச் சத்திரத்தின் அதிகாரி என்ன செய்தான் என்றால் ஒரு கோப்பையில் பாலை எடுத்துக் கொண்டுவந்து அவர் முன்னாடி காட்டினான். அவர் பார்த்திட்டே இருந்தாரு. சீடர்கள் கேட்டாங்க, "அறை கேட்கிறோம், இவரு என்ன கோப்பையில் பாலைக் கொண்டுவந்து காட்டுறார்" அப்படின்னு. அப்ப இந்தத் துறவி என்ன செய்தாராம் மரத்தில இருந்து ஒரு இலையைப் பறிச்சு போட்டார்; பாலில. போட்டவுடனே அவன் உள்ளே எடுத்திட்டுப் போயிட்டான் பாலை. திரும்பி வெளில வந்து "உள்ள அறை ஒதுக்கிட்டோம், போங்க" அப்படின்னான். இப்ப சீடர்கலேல்லாம் கேட்டிருக்கிறாங்க, "என்ன பண்ணினீங்க? அவன் பால் காட்டினான். நீங்க அதில ஒரு இலையைப் போட்டீங்க. என்ன நடந்திச்சு" என்றப்ப துறவி சொல்றாரு, "அறைகளெல்லாம் பூர்த்தியாயிருச்சு. உங்களுக்கு அறை கொடுக்க முடியாது அப்படிங்கிறதைக் காட்டுவதற்குத்தான் அவன் கோப்பையில பாலை நிரப்பிக் கொண்டு வந்தான். இன்னொன்று அந்தப் பாலை ஏன் நிரப்பினான் அப்படின்னா அந்த அறையில தங்கியிருக்கிறவங்க எல்லாம் குடிச்சவங்க. நிறையக் குடிச்சிட்டுத் தங்கியிருக்கிறாங்க. அதனால் அங்க உங்களுக்கு அறை வேண்டாம் என்றான். நான் என்ன செய்தேன் அப்படின்னா பாலில ஒரு இலையை மேலே போட்டா அது பாலை ஒன்றும் செய்திராது அதே நேரத்தில ஒரு இலை ஒதுங்கிறதுக்குக் கூடவா இடமிருக்காது, நான் ஒரு இலை அளவுக்குத்தான் ஒதுங்குவேன். அதனால எனக்கொரு இடங் கொடுங்க என்று சொன்னேன். இடங் கொடுத்திட்டாரு" அப்படின்னு சொல்லிட்டு நண்பர் சொன்னாரு "மனிதன் தன்னுடைய சொற்களைப் பயன்படுத்தாமல் செய்கைகளின் வழியாகவே நிறைய நேரங்களில தான் சொல்லவந்ததை சொல்லிருவான். ஆனா அவன் எதை சொன்னான் என்கிறதை விளக்கணுமில்லையா? அதுக்குத்தான் கதை வேண்டியிருக்கு. இதை சொன்னவருக்கும் கேட்டவருக்கும் தெரியும். ஆனால் அதை மற்றவருக்கு சொல்லுவதற்குத்தான் இருக்கு என்று." உடனே நான் அவருக்கு சொன்னேன் நீங்க புத்த மதத்திலிருந்து சொல்றீங்க. நான் எங்க ஊரிலிருந்தே சொல்றேன். எங்க ஊரிலேயே இதற்கு நிகரான சம்பவம் இருக்கு. எங்க ஊரில யாராவது இறந்திட்டா, இளவயதிலே இறந்திட்டா அவருடைய அந்த சாவு வீட்டில என்ன பண்ணுவாங்க அப்படின்னா அந்த மனைவி வீட்டுக்குள்ள இருந்திட்டு ஒரு பாத்திரத்தில தண்ணீர் ஊற்றி அந்தத் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வெளியிலே எடுத்திட்டு வருவாங்க. அந்த சாவு வீட்டில உட்காந்திட்டிருக்கிற ஒவ்வொருவரிடமும் அந்தப் பாத்திரம் காட்டப்படும். நான் சின்னவயதில அந்தப்பாத்திரத்தைக் குனிஞ்சு பார்த்திருக்கிறேன். அந்தப் பாத்திரத்திலே சிவப்புக் கலர்ல நான்கு பூக்கள் தண்ணீர்ல மிதந்திட்டிருந்தது. எல்லோரும் இப்படிப் பார்த்தாங்க. கடைசி வரைக்கும் இந்தப்பாத்திரம் போனது. பிறகு உள்ள போயிருச்சு. என்ன அது, எதற்காக இந்தப் பாத்திரம் காட்டுறாங்க, ஏதாவது சடங்கா அப்படின்னு கேட்கும்போது சொன்னாங்க "இல்லை, இறந்து போனவருடைய மனைவி நான்குமாத கர்ப்பமாகவிருக்கிறார். நாளைக்குக் குழந்தை பிறந்திச்சினா யாருக்குப் பிறந்திச்சு என்கிற சந்தேகம் வந்திரக்கூடாது. அதற்காக இந்த சபைக்கு நாகரிகம் கருதி இந்தப் பாத்திரத்தில பூக்களைப் போட்டுக் காட்டுறோம்." அவங்க சொல்லாமலே மொழித் தளத்துக்குள்ளே வராமலே ஒரு விசயத்தைச் சொல்லிடுறாங்க. புரிய வைச்சிடுறாங்க. எல்லோருக்குமே அந்த சபையிலே வந்தவங்களுக்கு இருக்கு. இவ்வளவு நுட்பமான மனதிருக்குப் பாருங்க. ஒரு விசயத்தைச் சொல்லுவதற்கு சாதாரண அவங்களுக்குப் பெரிய படிப்பில்லை, ஞானமில்லை, அவர்கள் எந்தத் தத்துவ அறிவும் கொண்டவர்களில்லை. ஆனால் மனதை இன்னொருவருக்கு சொல்லணும் அப்படின்னு நினைக்கும்போது அவர்களிடம் ஒரு கவித்துவம் இருக்கு. இந்தக் கவித்துவத்தை நான் பெரிதாக நினைக்கிறேன். அதனாலதான் எல்லாப் பெரிய அதிசயங்களையும் விட சாதாரணமானவர்கள் அதிசயம் என்று நான் நினைக்கிறேன். பெரிய அதிசயங்களெல்லாம் உலகில் முக்கியமானதல்ல. சாதாரண மனிதனிடம் என்ன அதிசயம் இருக்கு? எத்தனையோ அதிசயம் இருக்கு.
அங்க ஊரில ராஜாமணி என்கிற ஒருவர் உணவகம் வைச்சிருந்தார். இந்த உணவகத்தில ஒரு கட்டுப்பாடு இருந்தது. என்ன அப்படின்னா குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தால் அந்த உணவகத்தில அவர் குழந்தைகளுக்கு சாப்பாடு காசு வாங்கமாட்டார். நாங்க அவர்கிட்ட கேட்போம் "ஐயா எதுக்கையா காசு வாங்க மாட்டீங்க" என்னு. ராஜாமணி சொல்றாரு, "குழந்தைகள் என்னங்க ஒரு தோசை சாப்பிடுமா? அந்த ஒரு தோசையிலையா நான் பணம் சம்பாதிச்சிடப்போறன்? சாப்பிட்டிட்டுப் போகட்டும்." இதனால எங்க மக்கள் என்ன பண்ணுவாங்கன்னா யார் அவர் உணவகத்துக்குப் போனாலும் பிள்ளைகளையெல்லாம் அழைச்சிட்டுப் போயிடுவாங்க. ஏன்னா ஓசியில சாப்பாடு கிடைச்சிரும்ன்னு. அவரிடம் அந்த உணவகத்தைத் தாண்டி ஒரு அறம் இருந்தது. நாங்க மதிய நேரங்களில போயிட்டு அவருடைய உணவகத்தில பரோட்டா இருக்கான்னு கேட்போம். அவர் என்கிட்ட சிரிச்சிகிட்டே கேட்டிருக்கிறார்,"உங்க வீட்டில என்னைக்காவது மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு பரோட்டா சாப்பிட்டிருக்கிறாயா?" அப்படின்னு; "சாப்பிட்டதில்லை" அப்படின்பேன். "ஏன்" அப்படின்னு. "செய்யமாட்டாங்க" அப்படின்பேன். "உலகத்திலே இருக்கக்கூடிய சகலத்தையும் செய்யக்கூடிய பொம்பிளைகளுக்கு இந்த பரோட்டா செய்யத் தெரியாமலா இருக்கு? இதெல்லாம் செய்தா உன் வயித்துக்குக் கெடுதல் என்கிறதினால செய்யாம விட்டிருக்கிறாங்க. நீ அதை ஏன் ஹோட்டலில் வந்து சாப்பிட்டிட்டு கடைசியா உன் வயிறு கேட்டுப் போயிருச்சின்னு வெளில போயி சொல்லுவாய். உன் அப்பா அம்மா செய்யத்தவறின ஒண்ணை நான் செய்யலாமா? நான் உணவகம் நடத்தினாலும் அடுத்தவங்களோட வயிறைக் கெடுக்கமாட்டேன்." ஒரு அறம். ஒரு உணவு தயாரிப்பவருக்குக் கூட ஒரு அறமிருக்கு.
என்னுடைய வீட்டுக்கு ஒரு அம்மா கீரை கொண்டு வருவாங்க. அந்தக் கீரை விற்பவருக்கு எழுபது வயது. தினசரி காலைல கீரை எடுத்திட்டு வந்து விக்கிறாங்க, ஒரு கூடையில. நான் கேட்பேன், "ஏன்மா சுமந்து விக்கிறீங்க? உங்களுக்குப் பிள்ளைங்க இல்லையா? பேரர்கள் இல்லையா?" அப்ப அவங்க சொல்றாங்க, "வயதான நேரத்தில் நாம் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கலாம்னு நினைக்கிறேன். சும்மா உட்கார்ந்து இருந்தேன்னா தேவையில்லாமல் பிரச்சினைகள் வரும். நான் ஏதாவது சொல்லுவேன். அவங்க ஏதாவது சொல்லுவாங்க. மாறாக நான் ஏதோ ஓடியாடி ரெண்டு மணி நேரம் வேலை செஞ்சு அதிலிருந்து ஏதோ பணம் கொடுக்கிறேன்னு வையுங்க. பேரன் பேத்திகளுக்கும் சந்தோசம், எனக்கும் ஒரு சந்தோசம் ஐயா" அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே கூடையில பார்க்கிறேன் கொஞ்சக் கொய்யாப்பழங்கள் போட்டு வைச்சிருக்கிறாங்க. கீரை விக்கிறதைத்தவிர கொய்யாப்பழங்களும் விக்கிறீங்களான்னு கேக்க வாறேன்; இப்ப கேட்க வாறதுக்கு முன்னாடி என் பையன் வீட்டிலிருந்து ஓடி வந்து கீரைக்கார அம்மாட கூடைக்குள்ள எட்டிப் பார்க்கிறான். கீரைக்கார அம்மா "இரு"ன்னு சொல்லிட்டு பழத்தை வெட்டிக் கொய்யாப்பழத்தை என் பையனுக்குக் கொடுத்திட்டு சொன்னாங்க, "நான் கீரை விக்கப் போற எல்லா வீட்டிலேயும் குழந்தைங்க இருக்குமையா. இப்படி ஆசையா யாராவது குழந்தை ஓடிவந்து பார்த்திட்டு ஏமாந்து போயிறக்கூடாதில்ல அதுக்காகக் கொய்யாப்பழத்தை சும்மா வாங்கி வைச்சிருக்கேன். கேக்கிறதுக்கு ஓசில கொடுப்பேன்" அப்படின்னு. ஒரு சாதாரண இரண்டு ரூபாய்க்கு கீரை விக்கக்கூடிய அம்மாவுக்குக்கூட இன்னொரு வீட்டில் குழந்தை ஏமாந்து போய்விடக்கூடாதே அப்படிங்கிற எண்ணம் இருக்கு. அதை அறுத்துக் கொடுக்கிறாங்க. அப்ப செய்வது வணிகந்தான் என்றிருந்தாலும் அதுக்குள்ளேயும் ஒரு அறம் வேணும். ஒரு நியதி வேணும். இன்னும் சொல்லப்போனால் அடுத்தவரை மதிக்கவும், அவருக்குத் தன்னால் முடிந்ததை செய்யவும் வேணும். இதையெல்லாம் அவங்க எங்கிருந்து கத்துக்கிட்டாங்க? எல்லாவற்றையும் அவங்களுக்கு வாழ்க்கைதான் கத்துக்கொடுத்திச்சு. வாழ்க்கைதான் அவங்களுக்கு எல்லாப் பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கு. இந்தப்பாடங்களில இருந்து அவங்க கத்துக்கொண்டதைத்தான் அவங்க கதையாச் சொல்லுறாங்க. இந்தப் பாடங்களைத்தான் அவர்கள் கதைகளாக மாற்றிப் பிள்ளைங்களுக்கு சொல்லப் பார்க்கிறாங்க. பிள்ளைங்களுக்குப் பிடிக்கிறதில்லை. இன்று எந்தக் குழந்தைகளுக்கும் கதை சொல்றதுக்கு ஆளிருந்தால்கூட கேட்கப் பிடிக்கல. எங்க குழந்தைகளே கற்பனை உள்ளவர்களாகத்தான் பிறக்கிறார்கள். குழந்தைகளிடம் கதை சொன்னால் "நீ சொல்வதென்ன, நான் சொல்வதைக் கேளு" அப்படிங்கிறாங்க. பெரியவர்களுக்கு குழந்தைகளிடமிருந்து கதை கேட்கப் பிடிக்கல. ஏனென்றால் அவங்க சொல்லி நாம என்ன கேட்கிறது? ஆனால் கதைகள் உலகம் எல்லையற்றது. முடிவில்லாமல் போயிட்டே இருக்கக்கூடியது.
மகத்தான எவ்வளவோ கதைசொல்லிகள் தமிழில இருந்திருக்கிறாங்க. பேராசை மிக்க, மிகப்பெரிய கதைகளை சொன்ன கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் தொடங்கி சமகாலத்தில் இன்று விருது வாங்கிய எழுத்தாளர்கள் வரைக்கும் இந்த கதை மரபு மிக நீண்டது. அவ்வளவு கதைகள் சொல்லப்பட்டும் முழுமையாக மனித வாழ்க்கை சொல்லப்பட்டிருச்சா அப்படின்னா சொல்லப்படவே இல்லை. சொல்லப்படாத எண்ணிக்கையற்ற சம்பவங்கள் இருக்கு. அதை நினைக்கும்போதெல்லாம் மனது இன்னும் சொல்லலையே சொல்லலையே சொல்லலையேன்னு துடிச்சுகிட்டே இருக்கு. ஒரு சம்பவத்தை வாசிச்சேன். ரஸ்யாவில ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார். எலமன் தேவு என்பது அந்த எழுத்தாளரது பேர். அவர் இராணுவத்தில் பணியாற்றுகின்ற ஒரு அதிகாரியாக இருக்கும்போது ஒருநாள் அவருடைய மாமா ஊரிலிருந்து அவரைப் பார்க்க வராரு. பார்க்க வந்த மாமா பக்கத்தில இராணுவ முகாமிலிருந்த எலமன் தேவுவை பார்ப்பதற்காக முன்னாடி உட்கார்ந்திருக்கிறாரு. கொஞ்ச நேரம் இருங்க. அலுவலை முடிச்சிட்டு வாறேன்னாரு. அவசரத்தில் மாமா எதுக்கு உட்கார்ந்திருந்தாரு என்கிறதை தெரிஞ்சுக்காமலே தன்னுடைய அடுத்த பணியைப் பார்ப்பதற்காக பின் வாசல் வழியாக கார்ல ஏறிப் போயிட்டாரு. அன்றிரவு மறந்திட்டாரு. அடுத்த நாள் காலைல கேட்கிறாரு, ஐயோ மாமா வந்து ஆபிசில உட்கார்ந்திருந்தாரே அவரை மறந்திட்டு நான் வேலைக்குப் போயிட்டேனே, என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்னு அலுவலகத்துக்கு போனை போட்டு "எங்க மாமா வந்தாரே, என்னாச்சு?" ன்னு கேக்கிறாரு. "உங்க மாமா இரவெல்லாம் காத்திருந்தாங்க. காலைல ஊருக்குப் போயிட்டாங்க" அப்படின்னாங்க. சரி, நாம ஊரில போயி எதுக்கு வந்திருக்கிறார்ன்னு தெரிஞ்சுக்கலாம்னு இரண்டு மாதங்களுக்கு அப்பால அவர் பயணம் பண்ணி தன்னுடைய மாமாவைப் பார்ப்பதற்காக ஊருக்குப் போறாரு. ஊரில போனா ஒரு செய்தி அவருக்காகக் காத்திட்டிருக்கு. "உங்களைப் பார்க்க வந்தநாள்தான் உங்க மாமா கடைசியா உயிரோட இருந்தார். மறுநாள் இறந்து போயிட்டார்" ன்னு. இப்ப இவர் சொல்றாரு எதை சொல்லுவதற்காக என்னுடைய மாமா என்னைப் பார்க்க வந்தார்? அவர் சொல்லாமல் போன விஷயம் என்ன?
நம் வீட்டிலிருக்கக்கூடிய ஒவ்வொருவரிடமும் இதே போல ஒரு துயரம் இருக்கு. கணவனிடம் மனைவியிடம் தெரியாத, பிள்ளைகள் நமக்கு சொல்லாத, நம்முடைய அப்பா அம்மாக்கள் நமக்கு சொல்லாத, நாம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு சொல்லாத ஏதோ ஒரு செய்தி நம்மகிட்ட ஒளிஞ்சிட்டு இருக்கு. கேக்கவே இல்லை. அதைக் கேட்கிறதுக்கு நமக்கு மனசுமில்லை. நேரமுமில்லை. கேட்கலாம்னு நாம நினைக்கிற நேரத்தில அவங்க இல்லை. அப்ப நாம நம்ம கூட இருக்கக்கூடிய மனிதர்களை நம்ம வாழ்க்கை முழுக்கவுமே நம்ம பக்கத்திலே வைச்சிட்டு புரியாமலே இருந்திட்டு இருக்கோம். நேரம் ஒதுக்காம இருந்திட்டே இருக்கோம். அவர்களோட செவி சாய்க்காமலே இருந்திட்டு இருக்கோம். ஆனால் நீங்கள் தவறவிடக்கூடிய அந்த மனித உணர்ச்சி என்பது திரும்பக் கிடைக்கவே கிடைக்காது. அது ஒரு பெரிய விசயமில்லையா? அதனால்தான் தமிழிலகியமல்ல எல்லா இலக்கியங்களுமே பிரிவைத்தான் திரும்பத் திரும்ப எழுதிட்டே இருக்கு. நான் ஒரு எழுத்தாளனாக இன்னைக்கு ஒரு கச்சாப் பொருள் இருக்கிறதென்று கேட்டால் பிரிவுதான்; பிரிவைப் பற்றிப் பேசுவதுதான். பிரிவை எழுதுவதுதான். பிரிவுத் துயரத்தை சொல்கிறதுதான். ஏன்னா எவ்வளவு ஆண்டுகாலம் எழுதினாலும் மனிதனுடைய பிரிவு தீர்க்கவே முடியாத ஒன்றுதான். வீட்டிலிருந்து வெளியேறுவது பற்றி இலக்கியம் எழுதுவதே இல்லை. வீடு திரும்புவது பற்றித்தான் எழுதுது. ஏனென்றால் வீட்டிலிருந்து வெளியேறிப் போவதென்பது எளிமையானது. திரும்ப வீட்டுக்குப் போவதென்பது எளிமையானது கிடையாது. எல்லா வீட்டிலிருந்து வெளியேறியவர்களும் திரும்பி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவதில்லை. ஏதேதோ ஊர்களில, ஏதேதோ இடங்களில, ஏதேதோ வாழ்கையில அங்கங்க தங்கி திட்டுக்களைப் போல பறவைகள் வெவ்வேறு கூடுகளில அமர்ந்திருக்கிறதைப் போல எங்கேயோதான் இருந்துகிட்டே இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு குடும்பமும் அந்த வீட்டிலிருந்து பிரிந்து போனவர்களைப் பற்றி நினைச்சுகிட்டே இருக்கும். எப்ப வருவாங்க, எப்ப திரும்பி வருவாங்க; அதனாலதான் நாம ஒன்று கூடுகிறோம். நல்ல நேரங்களில், தீபாவளியில், பண்டிகைகளில, பொங்கலில ஒன்று கூடுகிறோம். ஒன்றுகூடும் நேரத்திலெல்லாம் நம்முடைய அழுகையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் உணவாக மாற்றுகிறோம். நம்முடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாதென்பதற்காகத்தான் உணவாக மாற்றி அந்த உணவை பரிமாறுகிறோம். அந்த உணவை சாப்பிடும்போது, ஒரு இனிப்பை சாப்பிடும்போது பையனுக்கு அந்தப் பிரிவு, அந்தப் பிரிவுத் துயருடைய வேதனை அந்த இனிப்புகளில கலந்திருக்கு. அவன் ஒரு நிமிடம் இனிப்பை சாப்பிட்டுகிட்டே அந்த இனிப்பை மட்டுமல்ல இவ்வளவு காலம் இவர்களைப் பிரிந்திருந்தோமே என்கிறதையும்தான் உணர்கிறான்.
இலக்கியங்கள் மனிதனுடைய இந்தப் பிரிவை, பிரிவினுடைய ஆதாரமான இந்த வேதனையைப் பாடிட்டே இருக்கும். கதைகளை எடுத்துகிட்டா கதைகளில் பெரும்பான்மையான கதைகள் பிரிவுத்துயரத்தைத்தான் திரும்பத் திரும்பத் திரும்ப வலியுறுத்திட்டே இருக்கு. செவ்விலக்கியங்கள், பேரிலக்கியங்கள்ன்னு சொல்லப்படக்கூடிய எல்லாமே பாருங்க; குடும்பத்திலயிருந்து வெளியேறிப் போயி எத்தனையோ சந்தித்து கடைசிலதான் அவன் பட்டம் சூட்டுவதற்கு திரும்பி வாறான். என்றோ ஒருநாள் அரசனாகப் போறான். ஆனால் வாழ்க்கை முழுதும் எங்கெங்கயோ நாடோடியாக இருக்கிறான். மிகப்பெரிய மகாபாரதத்தினுடைய வில்லாளியான அர்ஜுனன்கூட ஒரு ஆண்டு முழுக்க பேடியாகத்தான் வாழ்ந்திட்டிருக்கான். உங்களுடைய அடையாளங்களைத் துறந்து உங்களுடைய அத்தனை ஆயுதங்களையும் கைவிட்டு நீங்கள் மறைந்து வாழவேண்டிய காலமும் உங்கள் வாழ்க்கையில வரத்தான் செய்யும். மகாபாரதம் நினைவுபடுத்திட்டே இருக்கு வாழ்க்கை என்பது ஒரு புதிர். அதை நீங்க முன்கூட்டி முடிவு பண்ணவே முடியாது என்று. பேரிலக்கியங்களையும் கதைகளையும் கற்றுக்கற்று அந்தக் கதைகளைத் திரும்ப சொல்லி அந்தக் கதைகள் வழியாக வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான பொறுப்பைத்தான் சமூகம் ஒரு எழுத்தாளனுக்கு வழங்குகிறது. ஒரு மருத்துவருக்கு எப்படி ஒரு நோயைக் கண்டறிந்து அதற்கான மருந்தையும் சொல்லி அதற்கு முதலில அதை சொல்லும்போது மருத்துவருடைய சொற்கள்தானே முதலில மருந்தாகுது. யோசிச்சுப் பாருங்க, நாம யார் முன்னாடியும் சொற்களுக்காக இவ்வளவு பயத்தோட உட்கார்ந்திருக்கிறோமா? ஒரு மருத்துவர் முன்னாடி போயி உட்கார்ந்திருக்கிறோம். என்ன சொல்லப்போறார்; அதுதான் முக்கியம். மருத்துவர் வந்து உங்க கதை முடிஞ்சுதுன்னு சொல்றார் என்று வையுங்க. அவ்வளவுதான். மாறாக ஒன்றுமேயில்லைன்னு அவர் சொல்லிட்டார்னா போதும். அப்படியே மனது ஆறுதலாக இருக்கும். அப்பாடா, நல்லவேளை ஒண்ணுமேயில்லைன்னு சொல்லிட்டாருன்னு. ஒரு சொல் தானே அது. இந்த ஒண்ணுமேயில்லைங்கிற சொல்லை வேற எப்பயாவது நாம கேட்கும்போது இவ்வளவு முக்கியத்துவம் அடைச்சிருக்கிறோமா? என்ன? ஏனென்னா அங்கு அது வெறும் சொல். அது யாரிடமிருந்து, எப்போது வருகிறதோ அப்போதுதான் அதற்கு அந்த மருத்துவ குணமுடையதாக இருக்கு. மருத்துவர் சொற்களைத் தேர்ந்தெடுத்து சொல்கிறார். அந்தப் பணியைத்தான் எழுத்தாளனும் செய்கிறான். தேர்வு செய்து சொற்களை சொல்லி அதன் வழியாக வாழ்க்கையைக் காட்டுவதென்னும் பணியைத்தான் செய்கிறான்.
ஒரே ஒரு கதையைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். இந்தக் கதை தென்னாப்பிரிக்காவில் பழங்குடி மக்கள் சொல்லக்கூடிய ஒரு கதை. உலகத்திலிருக்கக்கூடிய எல்லா மனிதர்களுக்குமே பறக்கிற சக்தி ஒரு காலத்தில இருந்தது. சிறகுகள் இருந்தது. அவர்களால பறந்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியும். அப்படி இருந்த மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தினால பறக்கிற சக்தியை இழந்திட்டாங்க. அங்கங்க இருந்திட்டாங்க. நம்ம இந்துப் புராணத்திலகூட அப்படி இருக்கு. மலைகள் எல்லாம் ஒரு காலத்தில பறந்திட்டு இருந்தது. அவற்றோட சிறகுகளை வெட்டினதாலதான் அவை அங்கங்க தங்கியிருக்கு என்று நமக்குக்கூட அப்படி ஒரு கதையிருக்கு. இந்த மனிதர்களுக்கு சிறகுகள் இருந்து துண்டிக்கப்பட்டதனாலதான் அவர்கள் இன்னும் பறக்கணும்கிற ஆசையோடு இருக்கிறார்கள் என்று. இப்படி இருக்கிற மக்களிடம் ஒரே ஒருவர் இருக்கிறார். அவருக்கு மனிதர்களைப் பறக்க வைப்பதற்கான மந்திரம் தெரியும். அவர் சொன்னார்னா மனிதன் பறந்திடுவான். இவர்கள் எல்லோரும் அடிமைகளாக ஒரு பண்ணையில் வேலை பார்க்கிறார்கள். அந்தப் பண்ணை முதலாளியோ அவர்களுக்கு உணவு கொடுக்கிறதில்லை, உடைகள் கொடுக்கிறதில்லை, கடுமையான வேலையைக் கொடுத்து அவர்களை அடித்து மிதித்துத் துன்புறுத்தி வேலை வாங்குகிறான். எல்லோரும் போய் அந்த முதியவர்கிட்ட சொல்றாங்க, "உங்களுக்குத்தான் அந்த மந்திர சொல் தெரியுமே; தயவுசெய்து அந்த சொல்லை சொல்லி எங்கள் எல்லோரையும் பறக்க வைச்சிடுங்க. இந்தக் கஷ்டத்திலிருந்து எங்களுக்கு மீட்சி கிடைக்காதா" அப்படின்னு. அவர் சிரிச்சிக்கிட்டே சொல்றாரு, "கஷ்டப்படுறது மனிதனோட இயல்பு என்றிருக்கே. கஷ்டப்படுங்க. உங்களுக்கு சாப்பாடு கிடைக்கலையா முடிஞ்சளவுக்குக் கஷ்டப்படுங்க. ஏதாவது ஒரு உணவைக் கையில எடுத்துக்கோங்க" அப்படின்னு அவரு இவங்ககிட்டே உடனே இரக்கங் காட்ட மாட்டேங்கிறாரு. கஷ்டத்தைச் சகிச்சுகிட்டு திரும்ப வேலை பார்த்திட்டே இருக்கிறாங்க. ஒரு பெண், அந்தப் பெண் வந்து வேலை நேரத்திலே ஏதோவொரு தவறு செய்துவிட்டாள் என்பதற்காக சவுக்கடி கொடுக்கப்படுது. இப்ப அவர்கிட்டப் போய் சொல்றாங்க, "ஒரு பெண்ணை சவுக்கால அடிக்கிறாங்க. இப்பவாவது உங்களுக்கு மனசு இரங்காதா? இந்த அடிமைகளை எல்லாம் ஒரு சொல்லால் நீங்கள் பறந்து போக வைச்சிரமாட்டீங்களா?" அப்படின்னு கேட்கிறாங்க. அப்ப அவர் சொல்றாரு, "ஆண் பெண் எல்லாம் இல்லை. எஜமானன் எப்போதுமே மோசமானவனாத்தான் இருப்பான். ஏன்னா அவன் காரணம் சொல்லி யாரையும் அடிக்கிறதில்லை. அடிக்க விரும்பினால் அடிப்பான். உங்களுக்கு அழுகையைத்தவிர வேறுவழியில்லை. அழுங்க. எவ்வளவு வேணுமோ அழுங்க. ஆனால் அதுக்காகவெல்லாம் உங்களை உலகத்திலிருந்து தப்பிக்க வைக்க முடியாது." இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரிடம் மக்கள் முறையிடுறாங்க. அவர் பதில் சொல்ல மாட்டேன்கிறார். முடிவாக ஒருநாள் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை அவள் ஏதோவொரு வேலையில் தவறு செய்துவிட்டாள் என்கிறதினால அந்தப் பெண்ணின் வயிற்றில் தன்னுடைய பூட்ஸ் காலால் மிதிக்கிறான். இப்ப எல்லோரும் அந்தத் தலைவர்கிட்ட போய்ச் சொல்றாங்க, "இதுக்கு மேல இனி என்ன வன்முறை நடக்கணும்னு நினைக்கிறீங்க? இன்னும் பிறக்காத ஒரு குழந்தை மேலே வன்முறை ஏவப்படுது. அந்தக் குழந்தையின் மேல் ஒரு பாதணிகள் போய் ஏறி மிதிக்குதில்லையா? இதைவிடவா ஒரு வன்முறை வேணும்? இப்ப நீங்க விடுவிக்கக்கூடாதா?" அப்ப அவர் சொல்றாரு, "உலகத்தில் நம்ம மேல திணிக்கிற வன்முறைகளை நாம சகிச்சுக்கலாம். ஆனா பிறக்காத இன்னொரு தலைமுறையின்மீது வன்முறை செலுத்தப்படுவதை நாம எந்த வகையிலுமே சகிச்சுக்கிட முடியாது. நான் அந்த சொல்லை சொல்றேன். நீங்க எல்லோரும் பறந்து போயிடுங்க" என்று அந்த சொல்லை சொல்றாரு. மறுநிமிடம் அவங்க எல்லோரும் சிறகுகள் முளைத்து காகங்களைப் போல வானத்தில் பறந்து மறைஞ்சு போயிடுறாங்க. இந்தக் கதைக்குக் கீழ ஒரு சின்னக் குறிப்பிருக்கு; அந்த சொல்லைச் சொன்ன அந்தப் பெரியவரும் பின்னாடி மறைஞ்சிட்டாரு. ஆனால் இன்றைக்கு வரைக்கும் உலகத்தில இருக்கக்கூடிய அத்தனை எழுத்தாளர்களும் அந்தச் சொல்லைத்தான் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் அந்த ஒரு சொல் கிடைத்தால் போதும் மொத்த மனிதர்களையுமே இந்தத் தளைகளிலிருந்து விடுவித்துப் பறக்க வைத்து ஒரு பறவையைப் போல விரும்பின இடத்துக்கெல்லாம் போக வைக்க முடியுமாங்கிற அந்த மந்திரச் சொல்லைத்தான் தேடிட்டே இருக்காங்க. ஆனால் அந்தப் பெரியவர் சொன்ன ஒரு உண்மைதான் இருக்கு. என்னென்னா எப்போதெல்லாம் வன்முறை உச்சத்தை அடைகிறதோ அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளனது குரல் அவன் என்ன சொல்லுவான் என்று தெரியாது. அவன் சொல் மந்திரச் சொல்லாக மாறும். அந்த மந்திரச்சொல் அந்த மனிதர்களையெல்லாம் விடுவிக்கும். இதுவரைக்கும் உலகம் காட்டிய உண்மை அதுதான். நம்மை வழி நடத்திய பல சொற்கள் மந்திரச் சொற்களாகத்தான் இருந்திருக்கு.
ஒரே ஒரு கடைசி சம்பவத்தை சொல்லி முடிக்கிறேன். எனக்கு விருப்பமான நான் ஒரு எழுத்தாளனாக, ஒரு பயணியாக உருவாவதற்குப் ஒரு பெரிய எழுத்தாளர் காரணமாக இருந்தார். அவர் பெயர் ராகுல சங்கிருத்தியான். ராகுல்ஜி என்று சொல்லப்படக்கூடியவர். "ஊர் சுற்றிப் புராணம்" என்று ஒரு புத்தகத்தை எழுதினார். இந்த ராகுல்ஜி முப்பத்தியிரண்டு மொழிகள் தெரிந்தவர். உலகம் முழுவதும் சுற்றி அலைந்தவர். புத்த மதத்தில் போய் புத்த மதத்தில் ஞானியாக இருந்தவர். ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். உலகினுடைய விரல் விட்டு எண்ணக்கூடிய ஞானிகளில் ஒருத்தராக போற்றப்பட்ட அவர். அவ்வளவு மொழி தெரிந்தவர். ரஷ்யாவில் போய் வாழ்ந்த காலத்தில் ஒரு ரஷ்யப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிள்ளையோடு இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்பு ஊருக்கு வந்திட்டார். அந்த அம்மாவும் பிள்ளையும் அங்கேயே இருந்தாங்க. இப்படி இருந்த ஒரு மனிதருக்குத் தன்னுடைய கடைசி, அறுபத்தொன்பதாவது வயதில, அவர் இருக்கிறார். அவரது நினைவாற்றல் மொத்தமாகப் போயிற்று. யாராவது எதிரே வந்து நின்னீங்கன்னா யாரென்றே தெரியாது. அப்படிப் பார்த்திட்டே இருப்பாரு. உலகம் பூராவும் சுற்றியலைந்த, முப்பத்தியிரண்டு மொழிகள் தெரிந்த ஒரு ஞானிக்கு எதிரே இருக்கக்கூடிய ஆள் யாரென்றே தெரியாது. இவரை எப்படியாவது அந்த நினைவுகளை மீட்டுக் கொடுத்திட முடியாதா அப்படிங்கிறதுக்காக ஒவ்வொரு இடத்துக்கா கொண்டு போறாங்க. ரஷ்யாவுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. பல ஆண்டுகளுக்குப் பின்னாடி தன்னோட மனைவியும் பிள்ளையும் முன்னாடி வந்து நிற்கிறாங்க. மனைவியும் பிள்ளையும் அவரைப் பார்த்து கண்ணீர் விடுறாங்க. அவர் அவங்களை அப்படிப் பார்த்திட்டே இருக்காரு. அவருக்கு ஒரு நினைவும் இல்லை. அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் வருது. ஆனால் அவர் மனதிலிருந்து எதுவுமே இல்லை. ஆனால் அவர் கண்ணீர் எதிரே இருக்கக்கூடிய ஆளை அடையாளம் பார்த்திருக்கு. எதிரே இருக்கக்கூடிய மனைவியை, பிள்ளையை அடையாளம் பார்த்திருக்கு. ஆனால் அவருக்கு சொல்லத் தெரியவில்லை. இது என் மனைவி. நினைவு மொத்தமாப் போயிருச்சி. கடைசி நிமிடம் வரைக்கும் அந்தப் பெரிய உலகத்தின் மிக முக்கியமான பயணிக்கு நினைவு வரவேயில்லை. நினைவேயில்லாமல், ஒரு வெற்றுப் பலகையைப்போல தன்னுடைய வாழ்க்கையை அவர் முடிச்சுக்கிட்டார். நான் அவரோட வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போதெல்லாம் தோன்றுகிறது மனிதத் துயரத்தில் மிக முக்கியமானது அவன் தன்னோட நினைவுகளைத் துறக்கிறது இல்லையா? யோசிச்சுப் பாருங்க. யாரை விருப்பமாக வாழ்க்கையில் நினைக்கிறீங்களோ அவரைப் பற்றி நினைவுகளை இழந்த வாழ்வது என்கிறது எவ்வளவு பெரிய துயரம். என்னுடைய உரையில் முதலில சொன்னது மாதிரியே நினைவுகளைக் காப்பாற்றவும், நினைவுகளை அழிந்துபோகாமல் சேமிக்கவும், நினைவுகளை ஏதோ ஒரு வகையில் தொகுக்கவும் நமக்குக் கதைகள் தேவைப்படுது. ராகுல்ஜியினுடைய மொத்த வாழ்க்கையும் ராகுல்ஜியினுடைய எழுத்துக்குள்ள இருக்கு. ஆனால் அவருடைய நினைவிலிருந்து போயிடுச்சே. அவருடைய மனைவியை யாரென்று தெரியலையே. பிள்ளையை யாரென்று தெரியலையே. மனிதனால் நினைவுகளை ரொம்பக் காப்பாற்றவே முடியாது. எந்த நிமிடமேன்றாலும் உங்களிடமிருந்து ஒரு நினைவு பறிபோகலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் உங்களுக்காக உங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்கிறான். உங்களிடமிருந்து உங்களுக்காகப் பெற்ற நினைவுகளை தன்னுடையதாக்குகிறான். தன்னுடைய ஒளியில் நினைவுகளை எல்லாம் கதைகளாக்கிக் கொடுத்திட்டேயிருக்கிறான். அந்தப் பெரும் பணியை, என்னுடைய முன்னோடிகள் செய்துவந்த அந்தப் பெரும்பணியை நானும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் அப்படிங்கிற முறையில்தான் நான் இந்த விருதுக்கு இன்னைக்கு உங்க முன்னாடி வந்திருக்கேன். ஆகவே இதுவும் கூட பின்னாடி நினைவுகளில் தள்ளக்கூடிய ஒரு கதையாக மாறும்.
எனக்குமட்டுமில்லாம தமிழிலக்கியத்தின் மிகமுக்கியமான புனையாசிரியர்கள், புனைகதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்பு என்று நான் ரொம்பப் பெரிதாக மதிக்கின்ற பெரிய எழுத்தாளர்கள் இந்த விருதை இன்னைக்குப் பெற்றிருக்கிறாங்க. இதில நான் ரொம்ப குறிப்பிட்டு சொல்ல விரும்பிற விஷயம் என்னென்னா நான் ஒரு எழுத்தாளனாக உருவாகுவதற்குக் காரணமாக இருந்த ஆசானான கவிஞர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். அதுதான் எனக்கு பெரிய சிறப்பு. அப்படின்னா என்னை உருவாக்கிய என் ஆசானும் என்கூடத்தான் விருது வாங்குறாரு. அவரிடம் நான் முந்தாநாள் சொன்னேன், உங்களுக்காக நான் வந்து நன்றியைத் தெரிவிக்கனும்னு விரும்புறேன். அந்த சபையிலே. அவர் மட்டுமல்லாமல் யுவன் சந்திரசேகர், கவிஞர் அனார், பெருமாள் முருகன் இப்படி என்கூட தொடர்ந்து நேரடியாகப் பரிச்சயத்திலும் தமிழ் இலக்கியத்திலும் இயங்கிட்டு இருக்கக்கூடிய அந்த எழுத்தாளர்கள் எல்லோருடைய சார்பாகவும் இங்க வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். ஏனென்றால் இந்த விருது தமிழிலக்கிய சமூகத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கு. அந்த சமூகத்தினுடைய சார்பாக நான் எல்லோருக்காகவும் சேர்ந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டதாகத்தான் நினைக்கிறேன்.
இன்னொன்று என்னை இந்த விருதுக்கல்ல, என்னை ஒரு எழுத்தாளனாக உருவாக்குவதற்கு நிறையப்பேர் காரணமா இருந்தாங்க. இந்த சபைக்கு, நான் நிச்சயம் அவங்க பெயர்களை அறிவிக்கணும்னு விரும்பிறேன். குறிப்பாக ஒரு பத்துப் பன்னிரண்டு வயதில நான் ஒரு எழுத்தாளனாக ஆகணும் அப்படின்னு; எதுவுமே தெரியாது. படிக்கணும், என்ன செய்யணும்னே தெரியாத காலகட்டத்தில் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டி இன்று வரைக்கும் ஒரு ஞானத் தந்தையைப் போல ஒரு வழிகாட்டியாக இருக்கக்கூடிய தோழர் எஸ்.ஏ பெருமாள் அப்படிங்கிறவர்தான் என்னை எழுத்தாளனாக உருவாக்கினவர். அவருக்கு இந்தத் தருணத்தில எனது நன்றியைத் தெரிவிச்சுக் கொள்ள விரும்பிறேன். இன்னொன்று, எனது முதல் வகுப்பு ஆசிரியரான சுப்புலட்சுமி. அவங்கதான் எனக்கு அனா ஆவன்னா கற்றுக் கொடுத்தாங்க. அவங்க கற்றுக் கொடுத்த அந்த அனா ஆவன்னாவை வைத்துதான் நான் இன்னை வரைக்கும் சரியா எழுதிட்டிருக்கேன். அதனால நான் எல்லா சபைகளிலையுமே என் முதல் ஆசிரியை சுப்புலட்சுமிக்கு நன்றி தெரிவிச்சுக்குவேன். இங்கயும் அவங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா அவர்கள் கற்றுக்கொடுத்த தமிழ்தான் நான் இன்னைக்கும் பயன்படுத்திக்கிட்டிருக்கிற ஒண்ணு.
இன்னொன்று ஒரு எழுத்தாளனான என்னைக் காதலித்து, காதலித்த காலத்திலிருந்தே எனக்காக என்னுடைய மனைவி ஒரேயொரு விசயம்தான் சொன்னாங்க; "நீ எழுதணும்னு விரும்பினீன்னா நீ எழுது. எந்த வேலைக்கும் போக வேண்டாம். எங்களுக்காக எந்தப் பைசாவும் சம்பாதிக்கவேண்டாம். முழுநேரமாகவும் எழுத்தாளனாகவே நீ இரு. எழுத்தாளனாகவே வாழ். உன்னுடைய விருப்பம் போல ஊர் சுத்து. உன்னுடைய விருப்பம் போல என்ன வேணும்னாலும் பண்ணுன்னு" கடந்த பதினேழு வருடங்களாக துணையாக இருந்து என்னை முழுக்கவுமே ஒரு எழுத்தாளனாக மட்டுமாகவே வாழ வைக்கிற என் மனைவிக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புறேன். ஏன்னா அதைச் சொல்றது பெரிய விஷயம். ஆனா அதைச் செய்து காட்டுறாங்க. இன்னைக்கு வரைக்கு நான் ஒரு பள்ளி மாணவனைப் போல எனக்கு என்ன பிரியமாயிருக்கோ அதை செய்திட்டிருக்கேன். என்னுடைய வீட்டினுடைய சுமைகள் என்மேல எதுவுமே படல. முழுக்க அவர்களே தனியாக இதைத் தாங்கி என்னை ஒரு எழுத்தாளனா நீ இயங்குன்னு விட்டிருக்காங்க. பல சந்தர்ப்பங்களில வாழ்க்கையில நான் ரொம்ப சோர்வடைஞ்சிருக்கேன், வீழ்ச்சியடைஞ்சிருக்கேன். அப்பெல்லாம் எனக்கு ஒரேயொரு விசயந்தான் சொன்னாங்க, "You are a writer. நீ ஒரு எழுத்தாளன். எழுத்தாளனாகத்தான் இருக்கணும். எங்களுக்காக நீ எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை’ அப்படி.
இன்னொன்று என்னுடைய பிள்ளைகள். என்னுடைய இரண்டு பையன்கள். நான் ஒரு எழுத்தாளனாக இருக்கிறேன் அப்படிங்கிறதுக்காக பல நேரங்களில என்னை சந்திக்கக்கூடிய யார் யாரோ வாறங்க, தன்னுடைய நேரத்தை அவர்கள் விட்டுக்கொடுக்கிறாங்க. அப்பா என்னை இங்க அழைச்சிட்டுப் போகலையே, எங்ககூட வரலையே என்று ஒருபோதும் என் பிள்ளைகள் என்கிட்ட சொன்னது கிடையாது. மாறாக எல்லா நேரத்திலையும் அவங்க என்ன சொல்றாங்கன்னா "அப்பா உனக்குக் கூட்டமிருந்தா நீ அங்க போ. நீ எங்ககூட இருக்கிறது போதும்பா. ஆனா நீ எங்ககூட மட்டும் இருக்கணும்னு நாங்க நினைக்கமாட்டம்" அப்படின்னு. இந்த மனநிலை உள்ள பிள்ளைகள் வந்து எனக்கு வாய்ச்சிருக்கிறாங்க. அவங்களுக்கு நான் எல்லா நேரத்திலையும் நன்றியைத் தெரிவிக்க விரும்புறேன்.
இன்னொன்று என்னுடைய நண்பர்கள். நான் வந்து முதல் வகுப்பில சேர்ந்த அன்னைக்கு எனக்கு முதல், என்னுடைய வரிசையில் முன்னாடி நின்றிட்டிருந்த ஒரு பயல் திரும்பிப் பார்த்து என்னட்டக் கேட்டான், "நீ எந்த வகுப்பு?" அப்படின்னு. "ஒண்ணாம் வகுப்பு"ன்னு சொன்னேன். "ஒண்ணு ஏயா, பியா" அப்படின்னு கேட்டான். "ஒண்ணு ஏ" அப்படின்னு சொன்னேன். "நான் ஒண்ணு பியில இருக்கேன். நீயும் ஒண்ணு பி க்கு வா" அப்படின்னான். அவன் ஏன் கூப்பிட்டான்னு எனக்குத் தெரியாது. நான் உடனே எங்க அப்பாட்ட சொன்னேன், "நான் ஒண்ணு பி க்கு மாறப் போறேன்" அப்படின்னு. "சரி, மாறிக்கோ" அப்படின்னு சொல்லிட்டாரு. அன்றெல்லாம் அது ஈசி. நான் ஒண்ணு பி க்குப் போயிட்டேன். அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அவன் என்கூட நண்பனா இருக்கான். அதாவது ஒண்ணாம் வகுப்பு பி(B) இலிருந்து ஆரம்பித்து இன்றைக்கு வரைக்கும் அவன் எனக்கு நண்பனா இருக்கான். அந்த மாதிரி எனக்கு என் பள்ளியிலிருந்து இன்னிவரைக்கும் நண்பர்களா இருக்கிறவங்க இருக்காங்க. இந்த நண்பர்கள் எந்தளவுக்கு என் வாழ்க்கைல முக்கியம் அப்படின்னா பல நேரங்களில் நான் அவர்களைச் சோதிச்சுப் பார்க்கிறதுக்காக விளையாட்டாகக் கூட என் நண்பன்கிட்ட சொல்லியிருக்கேன், "என்கிட்ட பணமில்லை, என்ன பண்ணுவாய்?" அப்படின்னு. சொன்ன மறுநிமிடத்தில் ஒரு மணி நேரத்தில் என்னுடைய வங்கிக் கணக்கில ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணின பயலெல்லாம் இருக்கான். "எதுக்கடா பணம் போட்டாய்?" அப்படின்னு நான் கேட்டவுடனே சொல்றான், "நீதானே கேட்டாய். ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுத முடியாமல் போயிட்டால் நாங்களெல்லாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோஜனமே இல்லை. அதனால நீ உலகத்தில எங்க வேணும்னாலும் போ. என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ." ஒண்ணுமில்லை, நான் இப்போ இந்த கனடாவுக்கு வரப்போறேன்னு சொன்னவுடனே என்னுடைய ஒரு நண்பன் எனக்குத் தெரியாம என்னுடைய பர்சில அவனுடைய கிரெடிட் கார்டை சொருகிட்டு என் மனைவிகிட்ட சொல்லியிருக்கான், "அவன் எங்க போனாலும் அவன் விரும்பினதை வாங்கிக்கிடட்டும். இல்லைன்னா வாங்க மாட்டான். அதனால அவன் பர்சில என் கார்டை வைச்சு அனுப்பியிருக்கிறேன்" ன்னு சொல்லி தன்னோட கார்டை எனக்குக் கொடுத்தனுப்புறான் ஒருத்தன். So உலகத்தில நமக்குக் கிடைக்கிற மிகப்பெரிய இது நண்பர்கள்தான் எனக்கு, நான் அந்த வகையில மிகப்பெரிய பாக்கியவான். நிறைய நண்பர்களைச் சம்பாதிச்சிருக்கிறேன். இலக்கியத்தில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் நண்பர்கள் எல்லாருக்கும் நான் இந்த சபையில நன்றி தெரிவிக்க விரும்பிறேன். ஏனென்றா அவங்க எல்லோரும் சேர்ந்துதான் என்னை உருவாக்கியிருக்கிறாங்க. எல்லாத் தருணங்களிலும் என்னுடைய நண்பர்களினுடைய அந்தப் பரிவும் அன்பும் எனக்கு மிக மிக முக்கியமானது.
இன்னொன்று என்னுடைய வாசகர்கள். நான் அவங்களை வாசகர்கள் என்று ஒருபோதும் சொல்றதே கிடையாது. அவர்களை எல்லாரையும் நான் எழுதாத எழுத்தாளர்கள் என்றுதான் சொல்கிறேன். நான் எழுதுகிற எழுத்தாளன். நீங்கள் எல்லாம் எழுதாத எழுத்தாளர்கள். எந்த நேரம் வேணும்னாலும் நீங்க எழுதலாம். அந்த எழுதாத எழுத்தாளர்களினுடைய அன்பும் பாசமும் இன்னும் சொல்லப்போனால் அவங்களுடைய அக்கறையும் இல்லைன்னா என்னால ஒரு வரிகூட எழுத முடியாது. அவர்கள் யாரையும் நான் நேரடியாகக் கை குலுக்கினது இல்ல. நேரடியாக முகந்தெரியாது. ஆனால் எங்கோ ஒரு இடத்தில இருந்திட்டு என்னுடைய எழுத்தைப் படிச்சிட்டு, என்னுடைய எழுத்தைப் பற்றிப் பேசிட்டு, என்னுடைய எழுத்திற்காக சண்டை போட்டிட்டு, விவாதிச்சிட்டு, எனக்காக அவங்க எல்லா நேரத்திலையும் பரிந்து பேசிட்டு இருக்காங்க. அவர்களுக்கும் எனக்கும் என்ன உறவிருக்கு? நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன் என்கிறதைத்தாண்டி ஒண்ணுமேயில்லையே. ஆனால் என்னை அவர்கள் இந்தப் பண்பாட்டினுடைய, கலை இலக்கியத்தினுடைய, தமிழனுடைய பிரதிநிதிகளாக நினைக்கிறாங்க. அவர்களுக்கு நான் ஒரேயொரு உறுதி மொழியைத்தான் சொல்லுவேன், "அந்தப் பொறுப்புணர்ச்சியை நான் என்னைக்குமே மறக்கமாட்டேன். அது அந்தப் பண்பாட்டினுடைய பொறுப்புணர்ச்சி உள்ளவனாக நான் நடந்துக்கிடுவேன்" அப்படின்னு.
இன்னொன்று முத்துலிங்கம் அவர்கள். அவர்களை இந்த சபையில நான் கண்டிப்பா சொல்லியாகணும். ஏன்னா, நான் சென்னையில பேசும்போதே சொன்னேன். நான் முத்துலிங்கத்தினுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கிடப் போறேன்கிறப்போ எங்க ஊரில இருந்து ஒருத்தர் போன் பண்ணி என்கிட்ட கேட்டாரு, "முத்துலிங்கம் வருவாரில்ல அங்க?" அப்படின்னு. "முத்துலிங்கம் அங்க எங்க இருக்கிறாரு? கனடாவில இல்ல இருக்கிறாரு" அப்படின்னு சொன்னேன். "கனடாவுக்கு எப்ப போனாரு?" அப்படின்னு கேட்டாரு. "கனடாவிலதானே வசிக்கிறாரு" அப்படின்னு சொன்னவுடனே அந்த ஊரிலிருந்து நண்பர் கேட்கிறாரு, "அப்ப அவரு மதுரையில குடியிருக்கலையா?" அப்படின்னு. அந்தளவுக்கு தமிழ்நாட்டில் அவர் ஒரு தமிழ் எழுத்தாளர். அவர் மதுரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் குடியிருக்கிறதாத்தான் நாமெல்லாம் நினைச்சிட்டிருக்கோம். அவரை நான் பார்த்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கினவுடனே நான் அவர் கையைப் பிடிச்சிட்டு ஒரு நிமிடம் நினைச்சிட்டே இருந்தேன் நான் முத்துலிங்கத்தைப் பார்த்திட்டேன்தானா அப்படின்னு. அந்தளவுக்கு அவர் ஒரு தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாக அந்நியோன்னியமாக வாழ்க்கை முழுவதுமே இலக்கியம், எழுத்து என்று தேடித்தேடி இருக்கக்கூடிய ஒரு மகத்தான மனிதர். அவரோட ஒரு சபையில, அவரினுடைய ஒன்றிணைந்த ஒரு நிகழ்வில நான் கலந்துகிட்டேன் என்கிறது எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம். என் வாழ்நாளில கிடைச்ச ஒரு பேறாத்தான் நான் அதைக் கருதிறேன். அதற்காக முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை நான் தெரிவிச்சுக்கிறேன்.
இன்னொன்று இந்த தமிழ் இலக்கியத்தோட்டம் அப்படிங்கிறது பற்றி இங்க எப்படி இருக்கிறதென்பது தெரியாது. இந்த விருது அறிவிக்கப்பட்ட உடனே சென்னையில இந்த விருது எனக்குக் கிடைத்தது என்பதைக் கேள்விப்பட்டிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், என்னுடைய நெருக்கமான நண்பர், அவர் என்னுடைய வீடு தேடி வந்து எனக்கு ஒரு பரிசளித்து, அவர் இதே போல ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து தமிழகமறிய எனக்காக ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்தினாரு. யோசித்துப் பாருங்க; தமிழ் நாட்டினுடைய ஒரு புகழ் பெற்ற ஒரு நடிகர் ஒரு இலக்கியவாதிக்கு விருது கிடைத்திருப்பதற்காக ஒரு சபையைக் கூட்டி எல்லார் முன்னாடியும் அந்த விருதை பாராட்டி ஒரு சபை செய்தார். அப்போ மொத்த மீடியாவும் சேர்ந்து என்னட்ட கேட்டாங்க, "தமிழ் இலக்கியத்தோட்டம் என்றா யாரு? அவங்க எங்கயிருக்கிறாங்க? என்ன பண்ணிட்டிருக்கிறாங்க?" நான் சொன்னேன், "அவங்க தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு எங்கோ இருந்துகிட்டு நம்ம ஊரில கூட அங்கீகரிக்கப்படாத எழுத்தாளர்களைக்கூடத் தேடித்தேடி விருது கொடுத்திட்டிருக்காங்க. இது வெறும் எழுத்தாளர்களுக்கு மட்டும் கொடுக்கிற மரியாதை என்று நினைக்கமாட்டேன். தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தணும் என்கிறதுக்கு அவங்களுக்கு இருக்ககூடிய உண்மையான அக்கறையோட வெளிப்பாடுதான் இது. தொடர்ந்து அதைப் புதுசு புதுசா செய்திட்டு இருக்கும்போது எனக்கு அவங்களை மனம் நிறையைப் பாராட்டவும், இந்த முயற்சிக்கு எங்களாலான அத்தனை உறுதுணைகளையும் நாங்க கொடுப்போம்" அப்படின்னு சொல்லி அவங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்.
எல்லோருக்கும் வணக்கம்.